சாவுக் கழிச
"யே... வில்லழகி.... வெளக்கமாரு ஒடிக்க வர்றீயா?" "இந்த பன்னிகுட்டிவோள அவுத்து வுட்டேன். செத்த நேரம் மேச்சிட்டு கைனி தண்ணி காட்டி கட்டிப் போட்டுட்டு வர்றேன் செத்த நாழி இரு." "யே... கமலா.. வெளக்கமாரு ஒடிக்க வர்றீயா?" "எந்த பக்கம் போறீங்க..." "வடக்குவெளிதான் மரக்காயமூட்டு தோப்பு இருக்குல்ல அங்கதான். வெள்ளையம்மா வர்றன்னுது அத கூப்புடு... வேற ஆராரு வர்றன்னுது. தே... வில்லழகி வரா நீனு, நானு, வெள்ளையம்மா வந்தா நாளு பேரு கணக்காச்சி... நீராரத்த ஒரு மொரடு ஊத்திட்டு வர்றன்" என்று காய வைத்திருந்த மா வடுவை எடுத்துக் கொண்டிருந்தாள் கமலா. "ஓ.... செயிலம்மா....வ்...." வில்லழகி தொண்டை அடைக்க கத்தினாள். கமலாவும் செயிலும் வில்லழகியின் வீடு வந்தனர். பன்னிக்குட்டிகளை கட்டிவிட்டு மூங்கில் படலை அடைத்துவிட்டு வந்தாள் வில்லழகி. "எங்கியே வெள்ளையம்மா வருதுன்னீங்க.... வூட்டுல போய் கேட்டன் ராத்திரி அந்தாளு போட்டு அடிச்சிருக்கான் கோச்சிக்கிட்டு ஆத்தா வூட்டுக்கு பிச்சனூரு பூட்டாளாம். அவ பெரிய மொவஞ் சொன்னான். அந்தப் பய அப்படியே ஆத்தாளாட்டும்டீ...நெறத்த...