சாவுக் கழிச
"யே... வில்லழகி.... வெளக்கமாரு ஒடிக்க வர்றீயா?"
"இந்த பன்னிகுட்டிவோள அவுத்து வுட்டேன். செத்த நேரம் மேச்சிட்டு கைனி தண்ணி காட்டி கட்டிப் போட்டுட்டு வர்றேன் செத்த நாழி இரு."
"யே... கமலா.. வெளக்கமாரு ஒடிக்க வர்றீயா?"
"எந்த பக்கம் போறீங்க..."
"வடக்குவெளிதான் மரக்காயமூட்டு தோப்பு இருக்குல்ல அங்கதான். வெள்ளையம்மா வர்றன்னுது அத கூப்புடு... வேற ஆராரு வர்றன்னுது. தே... வில்லழகி வரா நீனு, நானு, வெள்ளையம்மா வந்தா நாளு பேரு கணக்காச்சி... நீராரத்த ஒரு மொரடு ஊத்திட்டு வர்றன்" என்று காய வைத்திருந்த மா வடுவை எடுத்துக் கொண்டிருந்தாள் கமலா.
"ஓ.... செயிலம்மா....வ்...." வில்லழகி தொண்டை அடைக்க கத்தினாள்.
கமலாவும் செயிலும் வில்லழகியின் வீடு வந்தனர். பன்னிக்குட்டிகளை கட்டிவிட்டு மூங்கில் படலை அடைத்துவிட்டு வந்தாள் வில்லழகி.
"எங்கியே வெள்ளையம்மா வருதுன்னீங்க.... வூட்டுல போய் கேட்டன் ராத்திரி அந்தாளு போட்டு அடிச்சிருக்கான் கோச்சிக்கிட்டு ஆத்தா வூட்டுக்கு பிச்சனூரு பூட்டாளாம். அவ பெரிய மொவஞ் சொன்னான். அந்தப் பய அப்படியே ஆத்தாளாட்டும்டீ...நெறத்துலயும் கொணத்துலயும்... சீவு ஒடிக்க நானும் வர்ட்டா பெரிம்மாங்குறான்." எனப் பேசிக்கொண்டே ஒன்னாம் நம்பர் வாய்க்கால் வழியாக நடக்க ஆரம்பித்தவர்கள், காசியம்மா கிணறு, அவுரி தொட்டி, உப்பணி, பனைமரங்கள் அடர்ந்த வாரியைக் கடந்து செங்கமலத்து நாயகி கோயில் பின்புறம் வடக்குவெளி முந்திரித் தோப்பில் நுழைந்தனர்.
"ஆளுக்கொரு பக்கமா போங்க...பொழுது சாயிற மேறி இருந்தா... புளியாமரத்து நெழலுக்கு வந்துடுங்க. இல்லன்னா பெரிய கோயிலு மணி அடிக்கும் கணக்கு பண்ணி வந்துருங்க"ன்னு பிரித்துவிட்டாள் கமலா.
இளம் பச்சையில் கொத்துக்கொத்தாகவும், முன்னமே பிடுங்கப்பட்ட கொத்தில் புதிதாய் முளைத்தவைகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன சீவாங்குச்சிகள். அடியில் பிடித்து வெடுக்கென்று இழுத்தால் வந்துவிடும். சிலர் அறுப்பருவா கொண்டு அறுப்பதுண்டு. சொந்தப் பயன்பாட்டுக்காகவும் சிலர் வருவதுண்டு. விற்பனை செய்ய அறுத்துச் செல்பவர்களும் உண்டு. இரண்டு நாள் வெயிலில் காய வைத்து, கைப்பிடி அளவு எடுத்தெடுத்து தட்டியதில் எளிதில் உதிர்ந்தவை போக மீதமிருப்பதை, காய வைத்து ஊற வைத்த வாழை நார் கொண்டு இறுகக் கட்டிப் போட்டால் மாதக் கணக்கில் வீடு கூட்டலாம்.
"என்னாடீ அட்டியே ஆளுக்கு ஒரு பக்கம் போங்கன்னுட்டு எஞ்சூத்துக்குப் பின்னாடி வந்து நிக்கிற" என்றாள் செயில் கமலாவைப் பார்த்து.
"இது என்னடி கதயா இருக்கு கோடு போட்டா போவ முடியும்"
"வெள்ளையம்மாவ பாத்திய... ஆத்தா வூட்டுக்கு போனவ காலம்பற கெளம்பிருப்பா. அவளுக்கு அங்க இருப்பு கொள்ளாது. இங்கதான் எங்கியாவது சீவு ஒடிப்பா..."
"நான் எந்த நொள்ளச்சியும் பாக்கல... அம்மோம் என்னா ரோசப்புண்ட அவளுக்கு. இன்னக்கி நேத்தா நடக்குது இந்த கங்காசி... அந்த சின்னபய பொறந்துதுலேர்ந்துதான் கொமாரி சிரியே கெதின்னு கெடக்குறான். அன்னக்கே ஊருக்காரன்ட்ட நாலு பங்கும் பாங்காளிட்ட சொல்லி என்னா ஏதுன்னு கேட்டுருந்தா இம்மோஞ் சோலிக்கு வேல இருக்கா" என செயில் மள மளவென மேய்ந்துவிட்டாள் கமலாவை
"இந்த சின்ன பய சோறு கீறு தின்னானா என்னன்னு தெரில? பள்ளிக்கொடம் முடிஞ்சிருக்கும். பன்னிக்குட்டிவோ என்னா அதம் பண்ணிக்கிட்டு கெடக்குதுவோன்னு தெரில." புலம்பிக்கொண்டே சீவு இழுத்தாள் வில்லழகி.
"இது எந்த கழுதயே இந்த எடத்துல வந்து இப்புடி பேண்டு வச்சிருக்கு எம்மோம் ஒசரத்துல இருந்து பேண்டுருந்தா இப்புடி செதறி கடக்கும். குச்சிகரி மக்க எம்மோந் தூரம் பேள வந்துருக்குவோ பாரு"ன்னு அண்ணாந்தாள்.
"ஓ.... சாமி.... ஓ.... சாமி ...... ஓ....செயிலக்கா.... ஓ....செயிலக்கா..... இங்க ஓடியாங்கடீ...." அலறியடித்து ஓடி கமலாவை பார்த்தாள் வில்லழகி.
"என்னாடீ.....யான்டீ....இப்புடி எறக்கிது... மரக்காயன் கைய கிய்ய வச்சான... இல்ல எதாவது சொன்னான. மூச்ச வாங்கு மொதல்ல..." கமலா பதறினாள்.
"வெள்ளையம்மா.... வெள்ளையம்மா...."
செயிலும் வந்தடைந்தாள். நாக்கு வறண்டு பேசத் தெம்பற்று மூச்சை இழுத்து இழுத்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள் வில்லழகி. வில்லழகியை இழுத்துக்கொண்டு செயிலும் கமலாவும் ஓடினார்கள். வில்லழகி கையைக் காட்டி வழி சொன்னாள். கமலாவும் செயிலும் அண்ணாந்து பார்த்தனர். முந்திரியின் வலுத்த கிளையொன்றில் விழி பிதுங்கி, நாக்கு தள்ளி விரைத்தபடி சாவுக் கழிசலோடி தொங்கிக்கொண்டிருந்தாள் வெள்ளையம்மா. செயில் மயக்கமுற்று விழுந்தாள். கொண்டுபோன தண்ணியை மூஞ்சியில் ஊற்றி எழுப்பினர். மூவரும் ஊருக்குள் வந்து செய்தியை சொல்லி ஆள் அனுப்பினர். வெள்ளையம்மாவின் பெரிய மகன் துயரத்தின் பெருங்கோபத்தோடு ஓடினான்.
"ம்மோவ்.....ம்மோவ்....ஆயா வூட்டுக்கு போறன்னுட்டுதான போன...." என்று கதறியபடி ஓடினான்.
சின்னவன் வில்லுவண்டி அப்பாவைத் தேடி ஓடுகிறான்.
"பெரிப்பா எங்கப்பாவ பாத்திய"
"கெழக்கு தெருவுல நொழஞ்சாங் எந்த வூட்ல பூந்தான்னு தெர்ல".
"இந்தத் தேவுடியா மொவனாலதான் எம்மா செத்தா.... இன்னக்கி அவன என்னா பண்றம் பாரு...."
"........................"
"வூட்ல யாரு? யோவ்... வெளிய்ய வாய்யா..."
சிதறிய சீவாங்குச்சிகள் ஒவ்வொன்றாகப் பொறுக்கிக் கொண்டிருந்த குமாரி, முடியை அள்ளி முடித்து வெளியே வந்தாள்.
"எப்பங் எங்க இருக்கான்".
"அத யாங் இங்க வந்து கேக்குற... நான் என்ன முடிச்சா வச்சிருக்கன்"
"எம்மா அங்க செத்து கெடக்குறா ஒன்னுமே தெரியாத மேறி நையாண்டிப்புண்டயா பண்ற." என குமாரியைத் தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
அழுக்கு வேட்டியால் கழுத்து இறுக்கப்பட்டு உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார் நல்லதம்பி. வீடு முழுக்க சாவுக் கழிசலின் வாடை.


கருத்துகள்
கருத்துரையிடுக