வாசம்
"அண்ணங் பணங் கிணம் அனுப்புச்சா இல்லியா?"
"நாளு வந்து சாவங்காட்டியும் நாழில பூடுவம் போல.... பணமும் அனுப்புல கிணமும் அனுப்புல... கன்னு யாவாரம் பன்றேன்., கன்னு யாவாராம் பன்றேன்னு.. எவள்ட்ட வாங்கி குடிச்சிட்டு கெடக்குறான்னு தெர்ல"
தீபாவளி,பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு தவறாது அப்பாவின் வருகையை எதிர்பார்க்கலாம்.
வானத்து நீல... இரண்டு பக்கமும் பாக்கெட் வைத்த முழுக்கை சட்டை எப்பவும் அணிந்திருப்பார்.
அரைத் தூக்கத்தில் சண்டையிட்டுக் கொள்ளும் முனகல் கேட்கும். அதனூடே வரும் வாசனைதான் அப்பாவின் வருகையை உறுதி செய்யும்.
"கன்னு வித்த காச தலமாட்டுல வச்சிட்டு தூங்குனேன் எவனோ எடுத்துட்டான்" என அப்பா சொல்வதை அம்மா நம்பவில்லை.
இவர்களின் சச்சரவுகள் ஒருபுறமிருக்க...கொண்டு வந்த பையைத் திறந்து திறந்து பார்ப்போம் நானும் அக்காவும். கால் கிலோ ஓல பக்கோடாவை பல் விளக்காத அந்தக் காலையில் அவசர அவசரமாக அக்கா உண்பாள்.
வீடே வாசம் பரப்புகிற அந்த டப்பியை ஒளித்து வைத்துக்கொண்டு முகர்ந்து பார்ப்பேன்.
"கன்னு வித்து கிழிச்சதெல்லாம் போதும்...முச்சாரமனத்துல(முத்துசேர்வாமடம்) ஒரு ஆளு கேரளாவுக்கு லைனு வெட்ட அழச்சிட்டுப் போறானாம் போ"...
அதன்பிறகு அப்பா பண்டிகை நாட்களில் வருவது கூட அரிதாகிவிட்டது.
அவ்வப்போது வரும் அப்பாவின் சட்டையின் நிறத்தையொத்த இண்ட்லேண்ட் லெட்டர் அவர் உயிரோடிருப்பதை உறுதி செய்யும்.
தீபாவளி, பொங்கலன்று தெரு முக்கில் நின்று எட்டி எட்டிப் பார்த்து ஏமாந்த நாட்கள் அதிகம். தீபாவளியின் விடியற்காலை படபடப்போடே விடியும். கண்ணை மூடிக்கொண்டே நுகர்கிறேன் வாசனை வரவில்லை. இந்த தீபாவளிக்கும் அப்பா வரவில்லை என ஏங்கித் தவித்த நாட்கள் இன்றளவும் ரணமிக்கது.
ஒரு ஆடி பதினெட்டன்று...
"தம்பி ஒப்பன் சேங்கணத்துல நெற போதைல நிக்கிறான் ஒம்மால்ட்ட சொல்லு" என யாரோ சொன்னதாய் ஞாபகம்.
காவி வேட்டியோடு பஸ் ஏறி பேருந்து நிலையத்தில் தேடியலைந்து நிற்கவியலா நிறை போதைக்காரரை மன்றாடி அழைத்து வந்து வீடு சேர்த்ததும்... பையைத் திறந்து நுகர்ந்தேன். அதே வாசனை... அப்பா வீடெங்கும் நிறைந்திருந்தார்.
"விஜேகுமாரு....அப்பாவுக்கு ரொம்ப முடில...ஓனர்ட்ட சொல்லிட்டு ஒடனே கெளம்பு" என நாகராஜ் மாமா அழைத்து சொன்னார்.
விடியற்காலை வீடு வந்தடைந்தேன். காதில் எறும்புகள் தங்க இடம் தேடிக்கொண்டிருந்தன. பெருமூச்சு சத்தம் என் இதயத்தின் பட படப்பை அதிகப்படுத்திக்கொண்டேயிருந்தது.
"புள்ள வர்றானா... புள்ள வர்றானான்னு வாசலையே அண்ணாந்து அண்ணாந்து பாக்குது ஒப்பன்" என முத்து அத்தை சொல்லவும் உடைந்து அழுத அந்த தருணத்தில்..... பெருமூச்சின் சத்தம் நின்றது. நான் ஊற்றிய பால் ஓரவாயில் வழிந்து மேலும் எறும்புகளைச் சேர்த்தது.
சனி மூலையில் AVT டீ தூள் கவரில் நான்கு வதங்கிய வெற்றிலை, அச்சு தேய்ந்த லட்சுமி சீவல் பாக்கெட்., மற்றும்
அப்பாவின் ரேகை பதிந்த ரோஸ் கலர் பன்னீர் கலந்த சுண்ணாம்பு டப்பா.
அதன் வாசனை குடிசையெங்கும் பரவியிருந்தது.
அவர் சடலங் கழுவி சவ்வாது தெளிக்கும்போது இப்படி எழுதினேன்.
அழுது முடித்த களைப்பாற
சூடாய் தரப்பட்ட தேநீரிலும்
பந்தக் காலிலும்
பாடை சோடிப்பிலும்
தொங்கும் பூவிலும்
வாண வெடியிலும்
பித்தள மரக்கா நெல்லிலும்
அதன் மேலிருக்கும் விளக்கிலும்
விழா முடித்த கையோடு வந்த
மேள செட்டிலும்
சற்றைக்கு முன்பு தூக்கிவிட்டு
சாய்த்து போட்ட பெஞ்சை
நிமிர்த்து கழுவினாலும்
மாறவே இல்லை
மரண வாசனை.
கருத்துகள்
கருத்துரையிடுக