தலைக் கவிழ்ந்த சிங்கம்

 

அந்தக் காட்டில் நரியும் பன்றியும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். யார் புத்திசாலி என்பதிலும் யார் பெரியவர் என்பதிலும் அடிக்கடி சண்டை வரும். இதைக் கவனித்துக் கொண்டிருந்த சிங்கத்திற்குக் கடுமையான கோபம். “நான்தான் இங்கே எல்லோரை விடவும் பெரியவர்” என நரியையும் பன்றியையும் சிங்கம் சத்தமிட்டு அழைத்தது. நடுங்கிக்கொண்டே இருவரும் சிங்கத்தின் முன் வந்தனர். 

“தேன் நிரம்பிய முழு தேன் அடையை யார் கொண்டு வருகிறீர்களோ… அவர்தான் உங்களில் பெரியவர்.” என்றது சிங்கம்.

வேக வேகமாக நரி ஓடியது. பன்றி நிதானமாக, ‘நரி தேன் அடையைக் கொண்டு வரட்டும். சிங்கம் தீர்ப்பு சொல்லட்டும். நாம் புத்திசாலித்தனமாகச் சிங்கத்துக்குப் பாடம் புகட்டுவோம். தேன் அடைக்குத் தேன் எப்படி வருகிறது எனக் கண்டுபிடிப்போம்’ என யோசித்துப் புறப்பட்டது. 

நரி தேன் நிரம்பிய ஒரு அடையைக் கொண்டு வந்தது. அதைத் தின்று ஏப்பம் விட்ட சிங்கம், “நரி நண்பா… இந்தத் தேனைக் கொண்டு வந்த நீதான் பெரியவர்.” என்றது. 

“கொஞ்சம் பொறுங்கள். பல நூறு பூக்களில் இருக்கும் இனிப்பான திரவத்தைச் சிறிது சிறிதாகச் சேகரித்து அவ்வளவு பெரிய கூட்டைக் கட்டுகிறது தேனீ. நம்மை விடவும் தேனீயின் உழைப்பு பெரிது. அதனால் தேனீதான் பெரியவர் என்றது” பன்றி.

சிங்கம் தலை கவிழ்ந்து நின்றது. “இனி நாம் சண்டை போட வேண்டாம். என்னை மன்னித்து விடு நண்பா…” எனப் பன்றியிடம் சொன்னது நரி.

மீண்டும் ஏப்பம் விட்டுத் தலைக் கவிழ்ந்தது சிங்கம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசம்

இருபத்தியோராம் நூற்றாண்டின்  அழகி.!