பெரமன
ரெட்டியாரு பாத்து மகாலிங்கத்துக்கு ஒதுக்குனதுதான் தெக்க ஓட பக்கம் பெரியாண்டவங் கோயிலுகிட்ட இருக்க வயலு. மே சாதிக்காரங்க வய சுத்தி நடுவுல மகாலிங்கம் வய... அவங்கப்பா மம்மல ரெட்டியாருக்கு ஒழச்ச ஒழப்ப 'நாலு சனம் சொல்லும் நாயக்கன் வூட்டு நாய் சொல்லும் பேய் சொல்லும் பெரியாண்டவங் கத்தி சொல்லும்... ராப் பகலா கம்முழிச்சி தண்ணி பாச்சி ஒத்த ஆளா சூரியங் கௌம்ப முன்ன அண்ட எடுத்து நாத்தடிக்க நாலு ஆளுவோல கூட்டியாந்து ஓடி ஆடி வெள்ளாம பாத்து நெல்லு மூட்ட வூடு வர வரைக்கும் வயலுக்கு வர மாட்டாரு பெரிய ரெட்டியாரு. கரும்பன் இருக்கான் எனக்கு சோத்துக்கு கொறச்சலா சொகத்துக்கு தவிச்சலான்னு வூட்டுலயே கெடப்பாரு.....நாப்பது ஏக்கரு வய ரெட்டியாரூட்டுத்து சுத்துப்பட்டுல மிஞ்சிக்க ஆளு இல்ல இவரு சொத்துக்கு.. காலங் காலமா அள்ளி குடுத்த கையி மம்மல ரெட்டியாரு குடும்பத்துக்கு. நாப்பது ஏக்கருக்கும் சரியான ஆளுவோ இருந்தாலும் கரும்பங் காவ காக்குற வயலு நல்ல வெள்ளாமன்னும் ராசிக்காரன்டான்னும் ஒவ்வொரு தடவ அறுப்பு முடிஞ்சதும் ரெண்டு மூட்ட நெல்லு போயிடும் வூட்டுக்கு... மத்த வயலுக்கு காவ இருக்க ஆளுவோ மனசு கஷ்டப்பட்டா நமக்கு ஏது சோறுன்னு ஊருக்கு தெரிஞ்சி ஒரு மூட்டய மாட்டு வண்டில அனுப்பிடுவாரு. ரெண்டாம் மூட்ட மாட்டுவோளுக்கு தவுடு புண்ணாக்கு வாங்க கால கருக்கல்ல கௌம்புவாங் கரும்பன் அப்ப ஒரு மூட்ட வண்டில போட்டு அனுப்புன்னு வண்டி ஓட்டுற ஒசரத்துக்கிட்ட சொல்லிடுவாரு ரெட்டியாரு..
ஒடம்பு வளயிற வரைக்கும் கெடந்தாரு... முடில சாமி என்னால நான் வூட்டோடயே கெடக்குறேன். எம் மொவன் ஒருத்தங் கெடக்கான் ஏதாச்சும் செஞ்சு குடு ஒனக்கு புண்ணியமா போவும். என் உசுரு கெடக்க ஒம் பேரு கெடக்கும்....மனசு ஒடஞ்சி நிக்கிறாரு ரெட்டியாரு..! கை போச்சா காலு போச்சா மூச்செல்லாம் நல்லாத்தான வுடுற இந்த கார திண்ணைல கெட.... ஆளுவோ வேல செய்யிறத வயல்ல நின்னு பாரு மொத்தமா அத்து வுட்டு பூட்டா எனக்கு புள்ளயா குட்டியா எந் தங்கச்சி மொவனுவோ ரெண்டு பேரு கெடக்கான். எட்டு பர்லாங்கு தள்ளி ஊரடிச்சி ஒலயில போடுறவனுவோ அவனுவோள நம்பி நான் எங்க தூங்குவேன். என்ன நம்பி மாரடிக்கிற மக்களுவோள நான் எப்படி தாங்குவேன்... 'தெக்கு வய' நீ பாத்து நீ உருண்டு பெரண்ட எடந்தான அந்த ஒரு ஏக்கரயும் தரேன். இங்கயே கெட நாள பின்ன ஒன்னுன்னா ரெட்டியான் வூட்டு மரியாதயோட அள்ளி வக்கிறேன்....
இவந்தான் மகாலிங்கஞ் சாமி எம் மொவன்...வய இருக்குறது மே சாதிக்காரவுங்க ஊருக்குள்ள நாளக்கி ஏதாச்சும்னா நீங்க பாப்பீங்க அதான் ஒரு ஞாவகத்துக்கு சொல்லி வக்கிறேன்..எலேய் கரும்பா சுத்துப்பட்டுல நம்மகிட்டதான் நெலம் பொலம் அதிகம்னு எல்லா பயலுக்குந் தெரியும். எவன் என்ன கேப்பான்...
அத வுடுங்க சாமி ஏரயும் மம்ட்டியும் புடிச்சி காப்பு காச்ச கையி ஒக்காந்து திங்க கூச்சப்படுது.... இந்தப்பய இங்க கெடப்பான் இன்னொரு கரும்பனா இருப்பான். அப்பப்ப வந்து போறன் வூட்டுல கடசி காலத்துலயாச்சும் எப்பன் வுட்டுட்டு போன வடக்க கரம்பா கெடக்க நெலத்த கிண்டி பாக்குறேன்....ஆயிரம் சமாதானம் சொல்லு கரும்பா எம் மனசு கேக்கல... காள கன்னுக்குட்டி கத்துது தண்ணி காட்றா கரும்.......... திரும்பி பாத்த கரும்பன கண்டுக்காம... யோவ் கணக்க புள்ள... மகாலிங்கத்துகிட்ட சொல்லி தண்ணி காட்ட சொல்லுயா....
ரெட்டியாரும் கரும்பனும் முன்ன பின்ன ஆச்சு காடு சேர... ரெட்டியாரு தங்கச்சி மொவனுவோ அடிச்சிக்கிட்டது ஒரு பக்கம் கரும்பன் மொவனுக்கு கொடுத்த ஒரு ஏக்கரயும் திருப்பிக் கேட்டது ஒரு பக்கம்....கணக்க புள்ள மனசு வச்சி அப்பம் பாத்த வேலய செஞ்சவன் ஒங்க மாமனுக்கு மாடா ஒழச்சவன் இவம் பங்கயாச்சும் கொடுங்கன்னு மகாலிங்கம் பங்கு ஒதுங்குச்சி.
தெக்கு வயல நம்பிதான் மகாலிங்கம் கண்ணாலம் முடிச்சான் கடம்பூரா பேத்தி முருவாயிய... லேசு பட்ட ஆளுல்ல அவளும்... கீழ் சீமக்காரி நாத்து நடுடின்னா நலுங்காம நடுவா சேத்த மிதிடின்னா செவனேன்னு மிதிப்பா பொதுவா கீழ் சீமயில பொண்ணெடுக்க மாட்டாங்க.. மேல சீம ஆளுவோ... வேல குடுத்து மாளாதாம். ஒழப்புன்னா ஒழப்பாம் செவள காள பொறப்பாம் கீழ சீம பொண்டுவோ... வெள்ளாம முடிஞ்சா தட்டப் பயிறு காராமணி பயிறு பச்ச பயிறு உளுந்துன்னு எப்பயும் வௌச்சல்லேயே இருக்கும் கீழ சீம.. ஆற வுட்டா ஓட தண்ணி அத வுட்டா போரு தண்ணின்னு மூச்சு வுடாம வெளையும் அந்த பக்கம் வயக்காடெல்லாம். முருவாயி நெளிவு சுளிவுல்ல பொம்பளதான் யாராருக்கு எப்புடி மரியாதயோ சரியா இருக்கும். அப்பன் ஆத்தா பேர சொன்னாலும் முருவாயிய தெரியாது கடம்பூரா பேத்தின்னாதாந் தெரியும்.
கடம்பூரா காட்டுல பொறந்தவ காட்டெரும கழுத கூட வளந்தவ ஊரே பஞ்சம் வந்து தவிச்சப்ப எரும மாட்டு மேல ஏறி ஒக்காந்தவ... ஒரு வாரங் கழிச்சி வந்தா ஊரு பஞ்சம் தீக்க... சனங்க பசிய போக்க... கம்பு , கல்ல , கேவுருன்னு பட்டணத்து பணக்காரமூட்டு நெல்லு களத்துல காஞ்சித யாருக்குந் தெரியாம கட்டிட்டு வந்துட்டா. ஊரே கொல சாமியா பாக்குது ஆம்பள பொம்பளன்னு பாக்காம காலுல வுழுது.... காட்ட திருத்தி கழனி அமச்சி வெவசாயங் கொண்டு வர செத்துதான் பொழச்சா கடம்பூரா... தோப்புத் தொரவுல அப்புடி இப்புடின்னு கைய வச்சிட்டான் நாகமுத்து கடம்பூரா மேல... "பஞ்சம் பறந்துடிச்சி பசியுந் தீந்துடுச்சி கண்டார ஓழி கடவுளு எங்காத்தா கடம்பூரா உசுரயும் எடுத்துக்குச்சி ".கடம்பூரா பெத்து போட்ட பொட்ட புள்ளய ஊரே வளத்துச்சி அவதான் முருவாயி.
கடம்பூரா கட்டி வச்ச ஒத்த குடிச... காடு கழனி அமச்சதுல ஒதுங்குன நாலு துண்டு நெலம். அவ சேத்து வச்ச பெரும் பேருன்னு முருவாயி வாழ எந்த கொறயுமில்ல...கீழ சீமக்கி அறுப்பறுக்க வந்த ஆளுவோ பாத்துதான் சொல்லிருக்காங்க மகாலிங்கத்துக்கிட்ட முருவாயிய பத்தி... ஒரு நல்ல நாளா பாத்து அங்கம் பங்காளிய அழச்சிக்கிட்டு மாட்டுவண்டிய பூட்டிக்கிட்டு கெளம்புனான். பத்து பர்லாங்கிருக்கும் முருவாயி ஊரு. போற வரைக்கும் வயக்காடும் ஓடையுமா ஈரக்காத்துக்கு மொரட்டு கட்டையனும் மொறைக்காம வருவான்.
ஊரு சனம்லாம் வெளில வந்து நிக்கிது. ஆரு வூட்டுக்குன்னு கேக்குது. வர சனத்தயும் ஆளுவோளயும் பாத்தா வசதி வாய்ப்பா தெரிஞ்சதும் அவங்கவுங்க வூட்டு பொட்ட புள்ளய வாசல்ல நிறுத்தி வேடிக்க பாக்குறாங்க. முருவாயி வூடு எங்கன்னு கேட்டு எறங்குது மகாலிங்கஞ் சனம். பாதி சனம் கூடிருச்சி முருவாயி வூட்டுல. வெக்கத்துல நிக்கிறா முருவாயி..! ஊர்ப் பெருசெல்லாம் பேசுது வெத்தல பாக்க மொன்னுக்கிட்டே சொன்னாரு தங்கவேலு. நாகமுத்து மொவன் பெரியவன ஒரு வார்த்த கேளுங்கய்யா ஒன்னா வாழுலன்னாலும் முருவாயி அப்பன் நாகமுத்துதான நாளக்கி நல்லது கெட்டதுன்னா அவந்தான... காட்டுல கெடந்தவனுக்கு சேதி போயி துண்ட ஒதறி தோள்ல போட்டுக்குட்டு ஓடியாறான் மே சட்ட இல்ல.. போடுற பழக்கமும் இல்ல.. சொல்லுங்க பெரியவங்களா ஆளு வுட்ருந்தீங்களா.. தம்பி முருவாயி ஒந்தங்கச்சின்னு ஒனக்கு தெரியும். பொண்ணு கேட்டு மேல் சீமைலருந்து வந்துருக்காங்க நல்ல எடந்தான் வெசாரிச்சோம். முருவாயியும் வெக்கப்பட்டு நிக்கிது. அதான் ஒங்கிட்ட ஒரு வாத்த கேட்டா ஒந்தம்பியோளுக்கிட்ட கேட்ட மாதிரின்னுதான்னு...
தோள்ல கெடந்த துண்டால ஓடியாந்து வந்ததால வந்த வேர்வைய தொடச்சிக்கிட்டே பேச ஆரம்பிச்சான் நாகமுத்து மொவம் பெரியவன் கணேசன்...
ஒங்க எல்லாருக்குந் தெரியும் எங்கூட பொறந்தது ரெண்டு தம்பிவோன்னு.. எங்கம்மா சொல்லிதான் தெரியும் கடம்பூராம்மாவ பத்தி.. ஊரே மதிச்ச ஒருத்தங்கவங்களால எங்களுக்கு ரத்த சொந்தமா முருவாயி இருக்குறது எங் கொலமே ஏதோ புண்ணியஞ் செஞ்சிருக்கனும். கண்ணாலத்துக்கு எனக்கு சம்மதம் முருவாயிக்கி சரின்னா எனக்கு என்ன இருக்கு. மூனு பொட்ட புள்ளக்கி செய்யிற சீரு செனத்திய செஞ்சிட்றேன். முருவாயிய கண்ணாலம் கட்டிக் கொடுத்துட்டா அது பேருல இருக்க நெலம் பொலத்த யாரு பாத்துப்பா நாங்க அண்ணந் தம்பிவோளா வெள்ளாம பாத்து அறுப்புக்கு அறுப்பு நெல்ல அனுப்பிட்றோம்...நாள பின்ன முருவாயி மொவனோ மொவளோ வந்து எங்காத்தா சொத்துன்னு கேட்டா இந்தா சாமிவோளான்னு நவுந்துடுவேன்.
என்னைக்கும் மொகங் கொடுத்து பாக்காத பேசாத அண்ணன் நம்ம மேல இம்மோம் பாசம் வச்சிருக்கே... தாயி வேற வேறயா இருந்தாலும் தகப்பன் ரத்தம் ஒன்னுதான எழுதியா வாங்குது. நம்ம அண்ணன்னு ஆயி போச்சுன்னு நெலத்த தர முடிவு பன்னிட்டா முருவாயி. சொன்ன சொல்லு மாறுல கணேசன். 'பாத்த சனம்லாம் பல்ல இளிக்கிது கண்ட சனம்லாம் கண்ண வக்கிது'. 'ஊரே வக்கிது வாயில கையி கட்டிட்டான் மகாலிங்கம் முருவாயி கழுத்துல தாலி'.
லால்பேட்ட வெத்தல, மீஞ்சுருட்டி சந்தைல சீப்பு மூன்றுவான்னு நாலு சீப்பு வாழப்பழம், ஏ .ஆர் பாக்கு ஒரு டெஜன் , மொழம் அம்பது காசுன்னு எட்டு மொழம் மல்லிய பூ, கந்தன் வூட்டு ஒடச்ச முந்திரி பருப்புன்னு ஊருக்கே காட்டிக் கொடுக்குது இன்னக்கி 'அது'ன்னு முருவாயி சோட்டு குட்டிவோள்லாம் வாய மூடிக்கிட்டு சிரிக்கிறாளுவோ...
காட்டு மேட்டுல திரியிற ஆளு மம்ட்டி புடிச்சும் கலப்ப புடிச்சும் காப்பு காச்ச கையி மொறட்டு வேலக்காரன் மகாலிங்கம் வயக்காடுன்னா...இதுல எப்படின்னு முருவாயிக்கே இருட்டு...
கண்ணொறங்காத எம் மாமா
காத்திருக்கேன் எம் மாமா
சீம மாட்டு பாலிருக்கு எம் மாமா
நீ சீக்கிரமா நெருங்கி வா எம் மாமா
கொண்டயில முடிஞ்ச
மல்லியப் பூ எம் மாமா
தாண்டாம நிக்கிறேன்
வாசப்படிய எம் மாமா
கொஞ்ச நாளக்கி
கெஞ்சிக்கிறேன் எம் மாமா
வயக்காட்ட நெனைக்காத எம் மாமா
எம்பாட்ட புரிஞ்சி நட எம் மாமா
ரெண்டு பேரும் சேந்திடுவோம் எம் மாமா
ரெண்டு புள்ளக்குட்டி பெத்துக்கலாம் எம் மாமா
முருவாயி மனசுக்குள்ளாரயே பாடி முடிச்சா விடிஞ்சும் போச்சு...வந்த சொந்தம்லாம் வூடு சேர நாலஞ்சி நாளு ஆச்சு புது மாப்ளயும் பொண்ணுமா வயலுக்கு கௌம்பிட்டாங்க.. நீராரத்த ஊத்தி எடுத்துக்கிட்டு. பக்கத்து வயல்ல வேல பாக்குற சனம்லாம் முணு முணுக்குது முருவாயி தங்க சங்கிலியையும் தங்க வளவியும் பாத்து...
எலேய் கரும்பம் மொவன நல்ல ஆளாதான் தேடி புடிச்சிருக்க. நல்ல மயிலக் காளயாட்டம் இருக்கா குட்டி கீழ் சீமக்காரிக்கிட்ட பாத்து இருடா மகாலிங்கம்... ஆம்பளயவே தூக்கி தோள்ல வச்சிப்புடுவாளுவோன்னு குப்பம்மா சொன்னதுக்கு வேல பாக்குற எல்லா சனமுஞ் சிரிக்கிது.. முருவாயிந்தும்தான்.
எந்த வயக்காடு நம்முளுது யாராரு வயல்லாம் பக்கத்துல இருக்கு வேலயாளுவோ பேருன்னு சொல்லிக்கிட்டே நடக்குறான் மகாலிங்கம். கவனமா கேட்டுக்கிட்டே வரப்பு மேல ஒக்காந்துருக்க தட்டான ஓட்டிக்கிட்டே வரா முருவாயி.
மகாலிங்கம் வயல ஒட்டுன ஏழெட்டு வயலுக்கு ஓட தண்ணியும் ஒதவும் வெள்ளாமைக்கு... ஓட காஞ்சா போரு தண்ணி. களிமங் கலருல மொழங்காலு அளவுக்கு கெடக்கு ஓடையில தண்ணி.. மேச்சலுக்கு வந்த ஆடு மாடு குடிக்கும்... வயலு வேலக்கி வர ஆம்பள பொம்பளைவோ வுழுந்து எழுந்திருச்சி வூட்டுக்கு போவும். கோரயும் காட்டாமணக்கும் அடந்து கெடக்குற எடத்துல தூண்டி போட்டு மீனு புடிப்பாங்க எள வட்ட பசங்க...மாத்து பொண்டாட்டி வச்சிருக்கவங் கூட ஓடய ஒட்டி இருக்க மூங்கி, தாழம்பூ காட்டுலதான் ஒதுங்குவான்.
ஓடய ஒரு ஓர பார்வயா பாத்துட்டு வந்தா முருவாயி.. பெரியாண்டவங் கோயிலு இருக்கு இங்கயே நில்லு நாம் போயி நம்ம வயலுக்கு எத்தன ஆளு வேலக்கி வந்துருக்குன்னு பாத்துட்டு வரேன்னு கோயிலுக்கு இருவது அடி தள்ளியே நிப்பாட்டிட்டு போனான் மகாலிங்கம்...வீரங் கோயிலு, அய்யா கோயிலு,பெரியாண்டவங் கோயிலுன்னு காட்டுல இருக்க கொல சாமிக்கிட்ட பொம்பளைவோ வரக்கூடாதுன்னு ஒரு சாங்கியம் இருக்குன்னு தெரியும் முருவாயிக்கு. எட்டி எட்டி கோயிலு வாசல்ல குத்தி நின்ன ஈட்டியவே பாக்குறா... நாலு வய தாண்டி மகாலிங்கம் நிக்கிறதயும் பாக்குறா... சனங்கெல்லாம் அது பாட்டுக்கு வேலய பாக்குது.. அடி மேல அடி வச்சி நடக்குறா பெரியாண்டவங் கோயில நோக்கி.....
மே கூர இல்லாத கோயிலு வெளா மரம், அரச மரம், கிலுவ மரம்னு அடந்து இருக்கு. ஒரு வாரந்தான் ஆயிருக்கனும் யாரோ படையல் போட்ட தடந் தெரியிது. மூலைல கடிச்ச சாராய பாக்கெட்டு, நமுத்துப்போன சுருட்டு, ஓம ரொட்டி, அவுலு கல்ல சக்கரன்னு அங்கங்க செதறி கெடக்கு... ஒடம்பெல்லாம் சிலுக்குது முருவாயிக்கி. சாங்கியத்து மேல ஒரு பயம்னாலும் சனங்க மேலயும் மகாலிங்கம் மேலயுந்தான் அதிக பயம். கட்டயா முறுக்குன மீசய தடவி தடவி பாக்குறா உருண்ட கண்ண பாத்து ஒதுங்கி ஈட்டிய தொட்டா கிலுவ மரத்துல ரவணாத்தி சத்தம்.... வெடுக்குன்னு கைய எடுத்தவ மேலயும் கீழயும் பாத்துட்டு மறுபடியும் கைய வச்சா பட படன்னு ரவணாத்தி கூட்டம் றெக்கய அடிச்சிக்கிட்டு பறந்துச்சி. சனம்லாம் பெரியாண்டவங் கோயிலு பக்க பாத்துட்டு கீழ குனிஞ்சிது.
குப்பம்மா மகாலிங்கத்த பாக்குறா திடு திடுனு ஓடி எங்கயா ஒம் பொஞ்சாதின்னதும் வேல பாத்த சனம் பூரா ஓடுது கோயில பாத்து... வெட வெடத்து நிக்கிறா முருவாயி....
யாரு புள்ள ஒன்ன இங்க வரச் சொன்னது. காட்டு கோயிலுக்கு பொம்பளைவோ வரக் கூடாதுன்னு தெரியாதா ஒனக்கு'ன்னு... சனங்களயே சுத்தி பாக்குறான் மகாலிங்கம்... ஏம்புள்ள ஒங்க ஊருல காட்டுக் கோயிலு இருந்துருக்கும்ல அங்க பொம்பளைவோ போயி பாத்துருக்கியான்னு குப்பம்மா கேட்டு முடிக்கல பொன்னனுக்கு முழி ஏறிடிச்சி நாக்க கடிச்சிக்கிட்டு கத்துனான். எலேய் பெரியாண்டவன்டா....ம்...ம்... கண்ணாலம் வச்சியே என்ன வந்து பாத்துட்டு போனியான்னு கத்துனான். தொப்புன்னு கால்ல வுழுந்து எஞ்சாமி என்ன மன்னிச்சிடு என்ன செய்யனுமோ செஞ்சிட்றேன்னான் மகாலிங்கம்...ரெண்டு சேவ மூனு கெடா நல்ல நாளா பாத்து படையல போட்டு நலிஞ்ச நாலு சனத்த கூப்ட்டு சோறு போடு படையலு அன்னக்கி ஒம் பொஞ்சாதி ஊரு எல்லய தாண்டி நிக்கனும்.. இதெல்லாம் ஒனக்கு தெரியதான் நான் கோயிலுக்குள்ள வர வச்சேன் ஒம் பொஞ்சாதியன்னு பொத்துன்னு வுழுந்தான் பொன்னன்...
கங்கலங்கி நிக்கிறா முருவாயி அலுங்காம வூட்டுக்கு அழச்சிட்டு போனான் மகாலிங்கம்...சேவ கெடால்லாம் வாங்கிடலாம். ஒன்ன ஊரு எல்லைல நிக்க சொல்றாங்க ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுன்னு என்ன பன்றதுன்னு பொலம்பிக்கிட்டே தூங்கிட்டாங்க ரெண்டு பேரும்...
கையில ஈட்டி, முறுக்கு மீசன்னு வெடச்சி நின்ன உருவத்த பாத்து திடுக்குன்னு முழிச்சி மகாலிங்கத்த எழுப்புனா முருவாயி..என்ன புள்ள ஆச்சுன்னு சுத்தி சுத்தி பாத்தான் ஒன்னயுங் காணும்.. ஒன்னும்ல அந்த கோயில்ல நின்னல்ல அதாங் கெனவு காட்டிருக்கும்னு தூங்கிட்டான். பயந்துகிட்டே படுத்துருந்தவ சத்தம்போடாத எழுந்திருச்சி கதவ தொறந்தா...
திண்ணயில தெருவு நாயி ரெண்டு கெடந்துச்சி.. கூட போட்டு கவுத்து கெடக்கு கோழி.. வால சிலுப்பிக்கிட்டே வாய அச போடுது ஏரு மாடு. எதுத்த வூட்டு சீமண்ண வௌக்கு வெளிச்சத்துல தெரியிது பொன்னனும் அவம் பொண்டாட்டியும் தலைல கைய வச்சிக்கிட்டு ஒக்காந்துருக்குறது...
பூன நட போட்டு பொன்னங் குடிசய பாத்து போறா முருவாயி. புருசனும் பொண்டாட்டியும் பேசிக்கிறாங்க ஏய்யா ஒனக்கு இந்த வேல நல்ல மனுசன் மகாலிங்கம் அவருக்கு செலவு வக்கிறியே இது ஞாயமா.? நான் ஒன்னும் சாராயங் குடிக்க சாமி வந்து ஆடுலடி வூட்டுல இருந்த வெத நெல்ல பெரிய பயலுக்கு ஒடம்பு முடிலன்னு வித்துட்டுதான கருப்பியா டாக்டர்ட்ட காட்டுனோம். இப்ப எல்லாரும் வயலு வேல ஆரம்பிச்சிட்டானுவோ நான் என்ன பன்றது. யாரு கிட்டயும் எதுக்கும் கை நீட்டி நின்னதுல்ல எவங்கிட்ட போயி வெத நெல்லு கேக்க சொல்ற.. யோவ் வெத நெல்லுக்கும் நீ சாமி வந்து ஆடுனதுக்கும் என்னயா சம்மந்தம்... கூறு கெட்ட சிறுக்கி படயலு அன்னக்கி எனக்கு சாமி வர்றப்ப வேண்டுதல் சரிதான் மகாலிங்கம்னு சொல்லிடுவேன். ஊரு வழக்கபடி யாரு குறி சொல்றாங்களோ அவங்களுக்கு பூசாரி பணம் வைக்கனும் எரநூறு தேரும் நெல்லு வாங்கிடலாம்.திங்கிற சோத்த ஒழச்சி திம்போம்யா இதெல்லாம் எதுக்கு. அட்டியே காலம் மாறிப்போச்சுடி என் வயலு வேல கெடக்கு ஒரு ஐநூறுவா கை மாத்தா கொடுங்க அறுப்பு முடிஞ்சி தரேன்னா எவனும் தரமாட்டான். சும்மானாச்சுக்கும் சாமி வந்து ஆடுனா ஆயிரங் கூட தருவான். என்னமோ போங்க இந்த பாவம்லாம் எங்க போயி தீக்குறதோ..
சர சரன்னு வூட்டு கூர சத்தங் கேட்டு வெளிய வந்து பாத்தாங்க பொன்னனும் அவம் பொண்டாட்டியும். வூட்டுக்குள்ள நொழஞ்சா முருவாயி.. பொன்னன் பயந்துட்டான் காதுல வுழுந்துருக்குமோன்னு...
விடிய கால சாணி கறச்சி போட வந்த பொன்னம் பொண்டாட்டி அறக்க பறக்க ஓடி ஆம்படயான எழுப்புனா கண்ண தொடச்சிக்கிட்டே வெளில வந்து பாத்தவன் பயந்துட்டான். ஒரு மூட்ட வெத நெல்லு திண்ண மேல கெடக்கு வூட்டு வாசல்ல... கோலம் போட்டுக்கிட்டு இருந்தா முருவாயி... அக்கோவ் இந்த மூட்ட யாருக்கா வச்சான்னு கேட்டா பொன்னம் பொண்டாட்டி. தெரிலடின்னு கோலத்த போட்டா... காலைலயே வயலுக்கு போற ஆளுவோ யாராச்சும் வச்சிருப்பாங்க விடிட்டும் கேக்கலாம்னு முருவாயியவே பாத்தான் பொன்னன்.
என்ன அண்ணே அப்படி பாக்குறீங்க.. யாரும் வைக்கலன்னா பெரியாண்டவன் வச்சதா நெனச்சி வேலய பாருங்கன்னு வூட்டுக்குள்ள போயிட்டா முருவாயி.
தூக்கி வாரிப்போட்டது பொன்னனுக்கு..! எல்லா மனுசாளும் ஒரே மாறி இருப்பாங்கன்னு நெனச்சது எந் தப்புதான். முருவாயி ஆயாவ பத்தி கேட்டுருக்கேன். அதே கொணம்... எப்புடி படயல நிறுத்துறதுன்னு யோசிக்கிறான் பொன்னன்.
விடிஞ்சி பொன்னன் வூட்டுக்கு வர்றாங்க முருவாயியும் மகாலிங்கமும்...வெட வெடத்து நிக்கிறான் பொன்னன்..
நெடுஞ்சாங் கெடயா மகாலிங்கம் கால்ல வுழுந்தான் பொன்னன்.
எழுந்திரு பொன்னா என்ன பழக்கம் இது அசிங்கமா... நாங்கூட ஒரு படையல போட்ருக்கலாம் தப்புதான். ஞாவகப்படுத்துனதுக்கு கூலியா ரெண்டு மூட்ட வெத நெல்ல வச்சிக்க சொன்னபடி
படயலு நடக்கும்னு கௌம்புனாங்க முருவாயியும் மகாலிங்கமும்...
எலேய்.... கோனையா இத்தன ஆம்பளைவோ நாத்தடிக்கிறீங்களே எவனாவது வாய தொறக்குறீங்களா... அங்க பாரு மெட்ராசுக்காரன் வயல்ல நாத்து நட்றவளுவோள....
ஏ..முருவாயி கேளடி
கனகாயி பாரடி
ஏலேலேலோ..... ஏலேலேலோ...
ஏ...நாத்து கத்த கொண்டாடி
நான் நடுறேன் பாருங்கடி
ஏலே லேலோ.... ஏலே லேலோ
ஏ.... முப்போகம் வெளையனும்டி
பத்தாயம் நெறயனும்டி
ஏலே லேலோ...... ஏலே லேலோ
ஏ..முருவாயி கேளடி
கனகாயி பாரடி
யக்கோவ் இந்த ஆம்பளைவோ மகாலிங்கம் வயல்லதான் நாத்தடிக்கிறாங்க காதுல வுழுற மாறி மெட்ட மாத்தி பாடு சொல்றேன்...
ஏ..கோனையா கேளையா
நாத்து நட்றத பாரய்யா...
ஏலே லேலோ.... ஏலே லேலோ
இவளுவோளுக்கு கொழுப்ப பாருய்யா பேர சொல்றாளுவ...! பாட்றவ யாரு மொட்டயம் பொண்டாட்டிதான ராத்திரி இருக்கு அவளுக்கு.
வெள்ளாவிக்கு கொடுத்து வாங்குன வேட்டியும் சட்டையுமா... கூட நாலு பேரோட வரப்பு சேறு வேட்டியில படாம நடந்து வர்றான் சவாவதி படையாச்சி. பாடுன சனம்லாம் கப்பு சிப்புன்னு மூடிக்கிச்சி...மகாலிங்கம் வயல சுத்தியிருக்க வயக்காட்டுல சவாவதி வயலும் ஒன்னு..வெளச்சலு இல்லாமயும் கரம்பா கெடக்குறதும் அந்த ஒரு வயலுதான்.அவன் வயலு சும்மா கெடக்கு மத்தவன்லாம் வேலைய பாக்குறானுவோன்னு சவாவதிக்கு கோவம்.
என்ன மகாலிங்கம் வேலைலாம் எப்படி போகுது...
ஏதோ போகுதுங்க.
உங்க வய ஏன் ஒன்னும் பண்ணாம கெடக்கு
பெரியவன் வெளி நாடு போயிட்டான். நெல்லு கில்லுலாம் வேணாம். இன்னும் ஒரு வருசத்துல நான் சொல்றேன் ஒன்னும் பண்ணாதீங்க... சீக்கிரம் கோடி கோடியா கொட்டும் நம்ம வயல்லன்னு சொல்லிபுட்டான்.
வாயடிச்சி நிக்கிறான் மகாலிங்கம். சவாவதி என்ன செய்யிறான்னு பாத்துட்டு நாமளும் செஞ்சிடுவோம்னு ஒரு பக்கம் மனசு துடிக்கிது. அட கோடியும் வேணாம் ஒரு பாடியும் வேணாம் நம்ம ஒடம்பு சேத்துல கெடந்ததுன்னு இன்னொரு பக்கம் அடிக்கிது.
நாத்து நடுற சனம் சவாவதிய பாத்து பம்முது...
அவன் போனதும் குசு குசுன்னு பேசுது...
மகாலிங்கம் பெரியாண்டவங் கோயில பாத்துக்கிட்டே வீட்டுக்கு போனான்.
மா எல, பூ மால போட்டு அழச்சிட்டு போறாங்க... கோனையங்கிட்ட துண்ட போட்டு தரவு பேசுன கெடாவ...விடிய கால நாலு மணிக்கி ஊரு கண்ணுல படாம கெடா கோயிலுக்கு போகனும். மாலயுங் கழுத்துமா மனுச கெடாவா பொன்னந் தெரியிறான் மகாலிங்கத்துக்கு.
மூங்கி கூடைல படையலு சாமான போட்டு வேட்டிய வச்சி மூடிக் கட்டி தூக்கிட்டு போறான் கோனையன். ஊருல முக்கியமான ஆளுகள எழுப்பி மகாலிங்கம் படையலுன்னு சேதி சொல்லிட்டு வர்றார் *தங்கலாரு... ஒரு பத்து பதினஞ்சி பேரு இருக்கும் படையலு போட வந்தவங்க.
சூரியங் கௌம்புறதுக்குள்ள படையல போட்றனும்னு முருவாயி எல்லக்கி போயிடிச்சான்னு கேக்குறான் குண்டுமணி..பொன்னன் மகாலிங்கத்த பாக்குறான் மகாலிங்கம் பொன்னன பாக்குறான்...ம்க்கும்....னு செறுமிக்கிட்டு பொன்னன் பேசுனான். இன்னும் விடில ஊரு எல்ல முந்திரிக்காடு நம்ம உதிரக்காவு கொடுக்குறப்ப அங்க பேயி வரும். முருவாயிக்கி ஆபத்துதான்...அதனால வூட்டுக்குள்ள வச்சி பூட்றது சரியா இருக்கும்னு நெனக்கிறேன்னு முடிச்சான்.
மகாலிங்கத்துக்கு பட படப்பு கொறஞ்சது.... பொன்னன் சொல்றதும் சரிதான்யா வவுத்து புள்ளக்காரிக்கி நாள பின்ன ஒன்னுன்னா என்ன ஆவுறதுன்னு கொழப்பத்த தீத்தான் குண்டுமணி.
வெள்ள துண்ட வாயில கட்டிக்கிட்டு சுடுட்டு, சாராயம்னு ஒவ்வொன்னா பிரிச்சி வச்சி சூடங்காட்ட நேரம் பாத்தான்...ஆயங்குடி அல்லா கோயிலு பாங்கு ஓதுற சத்தங் கேட்டு மணி அஞ்சுன்னு தீர்மானமாச்சு.....சூடத்த கொளுத்தி கெழக்க சூரிய தெசைல காட்டிட்டு ஈட்டிக்கி காட்டிட்டு வெளா மரத்தடிக்கி போனவன ஆள காணும். ஆளுவோள்லாம் திரும்பி திரும்பி பாத்துட்டு... தங்கலார என்னன்னு போயி பாருய்யான்னு மகாலிங்கஞ் சொன்னான்.
வெட வெடத்து ஓடியாந்தாரு தங்கலாரு......
*தங்கலார்- ஊரில் பஞ்சாயத்தோ நல்ல கெட்ட காரியமோ ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சொல்லி வருவார்.(மனித உருவில் அழைப்பிதழ்)
எலேய் மகாலிங்கம் , குண்டுமணி இந்த கொடுமைய பாருங்கடா...வெளா மரத்தடியில கைய கட்டி நிக்கிறான் பொன்னன். வாயில கட்டு போட்டுக்கிட்டு கையில கத்தியோட நிக்கிறாரு 'உண்ட மூக்கான்'(உருண்டை மூக்குள்ளவன்).
ஏழு ஊரு காட்டு கோயிலுக்கு உண்ட மூக்காந்தான் பூசாரி... இவன் குறி சொல்றதெல்லாம் நெசமா இருக்கும். வூடு வாச இல்ல ஊருக்குள்ளயிருக்க கோயில்ல தூக்கம், ஊருல எல்லா வூட்லயும் சோறு...பொட்டவெளி கிராமத்துல படையலுக்கு கூப்ட்டாங்கன்னு போனவன் திரும்ப வரல எங்கெல்லாமோ தேடியும் அகப்படல...
செத்திருப்பானான்னு ஊரு சனம் நெனச்சாலும் சுத்துப்பட்டு ஊருக்குள்ளதான பொணம் கெடக்கனும். எந்த நாயிக்குமா தெரியாம இருக்கும்னு பேசி பேசி ஆச்சு வருசம் ஆறு.. இன்னக்கி மகாலிங்கம் படையலுக்கு வந்து நிக்கிறான்.
ஆளுங்கெல்லாம் ஆ.....ன்னு பாக்குது. நாக்க கடிச்சிக்கிட்டே பேச ஆரம்பிச்சான் உண்ட மூக்கான். பொட்டவெளி போனவன் பொணமாயிருப்பான்னு நெனச்சீங்களா...ஊருலயே சுத்தும் உண்ட மூக்கான உருப்புடாம போவான்னு நெனச்சீங்களா....அப்பன் ஆத்தா இல்லாதவன் அழிஞ்சிருப்பான்னு நெனச்சீங்களா... தின்ன சோத்துக்கு வேல செஞ்சிருப்பேன்.. ஓசியில தின்னுருந்தா ஒரு வேல மறந்திருப்பேன்...சொல்லிடுங்க செஞ்சிட்றேன் உங்க வூட்ல எந்த வேலயும்.
என்ன உண்ட மூக்கா ஏதேதோ பேசுற... நாங்க தேடாத எடமா போகாத ஊரா அலஞ்சி ஓஞ்சிதான் ஒக்காந்துருக்கோம்.எங்க போன என்ன ஆச்சு.
பாத்த சனம் பாவம்ங்கும்....கண்ட சனம் கதறி அழும்....நாம்பட்ட வலிய பெரியாண்டவங் கேட்டா கண்ணீர் வுடுவான். பொட்டவெளி கோயில்ல படையலு முடிய இராத்திரி பதினொன்னு ஆச்சு...சைக்கிள்ல கொண்டாந்து வுட்டாங்க அந்த ஊரு ஆளுங்க பெரிய மதுவு கிட்ட.. அங்கயிருந்து மினிபஸ்ல வரலாம்னு நிக்கிறேன்.இப்ப ஏது பஸ்சுன்னு ஆமணக்கந்தோண்டி ஆளுகெல்லாம் சொல்லிட்டு போறாங்க..
ஆயிரந்தான் குறி சொல்றவனா இருந்தாலும் மினிக்கும் ,அய்யாவுக்கும் பதில் சொல்ல முடியுமா.? நடுக்குது ஒடம்பெல்லாம்...
(தொடரும்....)

கருத்துகள்
கருத்துரையிடுக