தூண்டிலும் சில நண்பர்களும்
அந்தக் குளத்தில் ஆமை, தவளை, மீன் வாழ்ந்து வந்தன. மூன்றும் நண்பர்களாக இருந்தன. நீர்க்கோழி மட்டும் தனியாக இருந்தது. அந்த மூன்று பேரிடமும் பேசுவதில்லை.
ஆமையும் மீனும் நீந்தி விளையாடுவதை, தவளை பார்த்து இரசித்துக் கொண்டிருந்தது. நீருக்குள் புழு ஒன்று நெளிவதைப் பார்த்த ஆமை, அதைச் சாப்பிடச் சென்றது. அதைப் பார்த்த மீன், “அதைச் சாப்பிடாதே… அது தூண்டில். உன்னைப் பிடித்துச் சென்று விடுவார்கள்” என்றது.
மீன் பார்க்காத நேரத்தில் அந்தப் புழுவைத் தின்று கொண்டிருந்தது ஆமை. சிறிது நேரத்தில் ஆமையைப் பார்த்த மீனுக்கு அதிர்ச்சி. ஆமை தூண்டில் முள்ளில் மாட்டித் தவித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மீன், தவளையைத் தேடிச் சென்றது.
தூண்டில் போட்டவர் கரைக்கு மேல் சென்று குடிக்க தண்ணீர் பிடிக்கச் சென்றிருந்தார்.
கரை ஓரத்தில் வந்த மீன், “நண்பா… நம் ஆமைக்கு ஆபத்து. தூண்டில் புழுவைத் தின்றுவிட்டது. அதன் வாயில் முள் மாட்டியுள்ளது.” எனத் தவளையிடம் சொன்னது.
தவளை நீருக்குள் குதித்து மூழ்கி ஆமையைப் பார்த்தது. ஆமை தன் வாயில் மாட்டியிருந்த முள்ளை எடுக்கப் போராடியது.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த நீர்க்கோழி, எலியை அழைத்து வந்தது. எலி, தூண்டில் நரம்பைக் கடித்துத் துண்டாக்கியது. தூண்டில் நரம்பு துண்டானதைப் பார்த்து, மீனும் தவளையும் மேலே வந்து பார்த்தன. நீர்க்கோழியும் எலியும் நின்றிருந்தன. ஆமையின் வாயில் மாட்டியிருந்த முள்ளைச் சிரமப்பட்டு எடுத்தன மீனும் தவளையும்.
இப்போது மீன், தவளை, ஆமையுடன் நீர்க்கோழியும் நட்பு ஆனது. எலி அவர்களின் ஒற்றுமையைக் கண்டு இரசித்தது.

கருத்துகள்
கருத்துரையிடுக