தெவசம் - 5

"சூடா... சூடா... விடிஞ்சிருச்சு பாரு எழுந்திரு..." 

பாயில் கிடந்தவன் எப்போது சூடாவின் மடியில் படுத்தான் என்று தெரியவில்லை. தங்கமணியைத் தூக்கி தனியே படுக்க வைத்துவிட்டு சூடாமணியை எழுப்பிவிட்டாள் சிவப்பாக்கியம்.

"அந்த நாலு நண்டயும் புட்டுப் போட்டு இந்தப் பயலுக்கு ஒரு ரசம் வச்சி குடு. நத்த ஊருது, அதை கொதிக்க வச்சி நோண்டி பெரட்டி குடு. நாட்டுமகாரவங்கள பாத்து சேசனுக்கு போறத பத்தி சொல்லிட்டு வரேன்..." எனக் கிளம்பினாள்.

ஏ.வி.டி. டீ தூள் பையை வெற்றிலைப் பொட்டலமாக மாற்றியிருந்தார் சிங்காரு. வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பு தடவிக் கொண்டிருந்தவரிடம், "சேசனுக்கு போயிட்டு வருவோம். ஒங்கூட இன்னும் ரெண்டு நாட்டுமகாரவங்கள அழச்சிக்க" என்று அவரது வெற்றிலைப் பொட்டலத்திலிருந்து சீவலை எடுத்து உள்ளங்கையில் வைத்து நிமிட்டினாள் சிவப்பாக்கியம்.

"பெரிய நாட்டான்ட்ட ஒரு வார்த்த சொல்லிடு. செகநாதன்ட்ட நான் சொல்லிட்றேன்." எனச் சுண்ணாம்பு குவளையை சிவப்பாக்கியத்திடம் தந்தவர், "காசி கீசி வச்சிருக்கியே... அங்க போனா ஆளுவோளுக்கு டீ கீ வாங்கி தரணும்." என்றார்.

"ஓயில ஒண்ணஞ் சம்பாரிச்சி குடுத்துது... சாமி வூட்டுக்குள்ள இருக்க தொம்பக்கூடு நெறஞ்ச பணம் இருக்கு. எலி தின்னுது போவ மிச்சத்த எடுத்தாறேன்." எனச் சினுத்துக் கொண்டாள்.

வேட்டி மடிப்பிலிருந்து சில ரூபாய்த் தாள்களை எடுத்துக் கையில் திணித்து, "தோது படும்போது குடு" என்றார்.

வெற்றிலை சிவந்து ஓரவாயில் வழிய முற்பட்டதைத் துடைத்துவிட்டு பணத்தை வாங்கியவள், பெரிய நாட்டார் வீட்டிற்குச் சென்றாள்.

"ஆயி... அவங்க இல்லய" என வீட்டிற்குள் நுழைந்தாள்.

காய்ந்த நெய்வேலி காட்டாமணக்கு விறகுகளை அடுப்பில் திணித்துக்கொண்டே, புகையை ஊதாங்குழலால் ஊதிக் கொண்டிருந்தார் பெரிய நாட்டார் மனைவி கனகம்மாள். வீடு நிறைந்த புகையில், வந்திருப்பது யாரெனத் தெரியாமல் புகை மறையும் வரை வெறித்துப் பார்த்துவிட்டு, "வா ஆயி..." என்றதோடு மீண்டும் அடுப்பை ஊத ஆரம்பித்தார் கனகம்மாள்.

'நம்ப ஆத்தரம் அவரசம் தெரியாமதான் இந்தம்மா அது வேலைய பாக்கும். இம்மோந் நாளு இல்லாம இன்னக்கி வூடு தேடி வந்துருக்கோமே... என்னா ஏதுன்னு கேக்குதா பாரு. நாந்தான் உள்ள நொழயும்போதே ஆளு இருக்கான்னு கேட்டுட்டு நொழஞ்சேன்ல அதுக்காச்சும் வதுலு சொல்லுதா பாரு. இந்த காட்டாமணிய அடுப்புல போட்டு ஊதி ஊதி காது போயிருச்சு இந்தம்மாவுக்கு' என முனகினாள் சிவப்பாக்கியம்.

"காலம்பறயே யான்டி இம்மோம் பொகச்சல போட்ருக்க... நெல்லா வெவிக்கிற" என வந்தார் பெரிய நாட்டார்.

சிவப்பாக்கியத்தைப் பார்த்ததும், "வாயீ... நானே வந்து பாக்குணும்னு இருந்தேன். சிங்காரு கொளத்துல பாத்துட்டு வெவரத்த சொன்னாரு. நீ போ நாங் மேல தண்ணி வூத்திட்டு வரேன்" என்றார்.

கனகம்மாளிடம் கையைக் காட்டிவிட்டுப் புறப்பட்டாள்.

"யாங் வந்துது ஒடனே ஓடுது" எனக் கணவரிடம் கனகம்மாள் கேட்கவும், "சேப்பாக்கியத்து வூட்டுக்கார்ர போலீசு புடிச்சிட்டு பூடுச்சாம். சேசனுக்கு கூப்ட வந்துச்சு" என்றார்.

'நான் உங்கிட்ட எதுவும் கேக்கல. நீயும் எங்கிட்ட எதுவும் சொல்லல' என்பதுபோல் அடுப்பை ஊதிக் கொண்டிருந்தார் கனகம்மாள். 

"இந்த மயிருக்கு என்னாத்துக்கு சேதி கேக்கணும்" எனக் கோவணம் கட்டிக்கொண்டே குளிக்கச் சென்றார். 

அடுப்பு கனன்று எரிய ஆரம்பித்தது. வீட்டைச் சூழ்ந்திருந்த புகை விலகி வெளிச்சம் கூடியிருந்தது. துண்டை முறுக்கி முதுகில் இழுத்துக் கொண்டிருந்தார் பெரிய நாட்டார். கொராக்குட்டியொன்று வேலிப் பிரண்டையைத் தாவி இழுத்துக் கடித்தது. "எம்மோந் தழ கொண்டாந்து போட்டாலும் இதுவோ வேலி பாயதான் நிக்கிது" எனப் புலம்பிக்கொண்டே குளித்து முடித்தார்.


சிவப்பாக்கியம் வீடு நுழையும்போது நண்டு குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. 

"இன்னும் ஒரு கொதி வந்துட்டா எறக்கிடுவேன். சோத்தையும் வடிச்சிட்டேன். ஒரு வா அள்ளி போட்டுட்டு போம்மா..." என்றாள் சூடாமணி.

"சோறு ஒன்னுதான் கொற. கொழம்ப எறக்குனதும் அந்த பயலுக்கு மொதல்ல சோத்தக் குடு. நீயுந் தின்னு. நாங் கரத்தாங் கடைல ஒரு சுடுதண்ணி வாங்கி குடிச்சிக்கிறேன்" எனப் புறப்பட்டாள்.

வில்வகுளத்து செட்டியார் கடையில் சீவல் மட்டும் வாங்கியவள், பிரதான சாலைக்குச் சென்றதும் சம்போடையார் கடையில் வெற்றிலை வாங்கினாள். 

"சீவ ஒரு எடத்துல வெத்தல ஒரு எடத்துல பொயல ஒரு எடத்துலன்னு... ஓங் யாவாரம் பெரிய யாவாரமா இருக்கு" எனப் புலம்பினார் சம்போடையார்.

"எத எங்க வாங்குனா என்ன காசி கொடுத்துதான வாங்குறேன். எனாமாவா வாங்குறேன்." என்றவள், "நீயும் லால்பேட்ட பாயிவோள்ட்டதான் வெத்தல வாங்குற, வில்லாகொளத்து செட்டியாரும் அங்கதான் வெத்தல வாங்குறாரு. காம்ப எண்ணி எண்ணி தராரு..." என்றாள்.

"வெத்தலதான் காம்ப எண்ணி தராங்க. சீவலு பொயலையெல்லாம் யாந் தனித்தனியா வாங்குற" என்றார் சம்போடையார்.

"அதெல்லாஞ் சொல்ல நேரமில்ல சம்போடையார, யாங் வூட்டுக்கார்த்த போலீசு அழச்சிட்டு போயிருக்காம். இங்கதான் ஜீப்ப நிறுத்தி யம் பேரன எறக்கி வுட்டாங்க ஒனக்கு தெரியாத... நான் சேசனுக்கு போறேன்" எனப் புறப்பட்டாள்.

'கஞ்சிக்கி இருக்கோ இல்லியோ இதுவோளுக்கு. வெத்தல சீவலு போட்டுக்கணும். சேசனு போறதுலாம் சல்லிசா பூடுச்சு இதுவோளுக்கு' என முனகினார் சம்போடையார்.

கரத்தான் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர் பெரிய நாட்டாரும், சிங்காரும், செகநானும். சிவப்பாக்கியத்தைப் பார்த்ததும், டீ போட ஆரம்பித்தார் நடு கரத்தான்.

"யாங் ஆயி... வேல வித்து இல்லன்னா வூட்ல கெடந்தா என்னா ஓம் புருசன். யாங் வூரு வம்புலாம் நமக்கு" என்றார் நடு கரத்தான்.

"ரவ சுடு தண்ணி குடிக்க போவ... நீ இல்லாத கதலாஞ் சொல்லுவ. வேல வித்துக்கு போனாலும் போவுலன்னாலும் வீணு வம்புக்கு போவாது யாங் வூட்டுக்கார்த்து... வேற என்னுமோ நடந்துருக்கு. அந்த காத்தாயிக்கிதான் தெரியும். சேசனுக்கு போயிட்டு வந்து வச்சிக்கிறேன்." 

நெடு நேரமாய் பேருந்துக்காகக் காத்திருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு காக்கை குருவியைக் கூட காணவில்லை என்பது போல் எட்டி எட்டிப் பார்த்து சலித்துக்கொண்டனர். இம்முறை பேருந்து வருவதுபோல் தெரிந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வந்துகொண்டிருந்த பேருந்தைக் கண்டதும் பரபரப்பாக ஏற நின்றனர். பச்சை வண்ணப் பேருந்தின் ஓட்டுநருக்கு வலதுபுறத்தில் இருந்த ரப்பர் ஹாரனை கையால் அழுத்தி ஒலியெழுப்பிக் கொண்டே பேருந்து வந்து நின்றது. ஒவ்வொருவராக ஏறி முடிந்ததும் திணறி முன்னேறியது பேருந்து.

வெகு நேரமாக காத்திருந்தவர்கள் ஏறி அமர்ந்தது போக, வரும்போதே கூட்டம் முண்டியடித்துக் கொண்டேதான் வந்தது பேருந்து. வெற்றிலைப் பொட்டலத்தைப் பத்திரப்படுத்தி இடுப்பில் கட்டிவிட்டு ஏறினார் சிங்காரு. சுருக்குப் பையை இடுப்பில் இறுக்கமாகச் செருகிவிட்டு சிவப்பாக்கியமும் ஏறினார். ஆளுக்கொரு பக்கமாக செகந்நாதனும் பெரிய நாட்டாரும் ஏறினர். 

"இம்மோஞ் சனத்த ஏத்திக்கிட்டு பொன்னேரி மோட்டுல எப்புடி ஏத்துவான் அந்த டைவரு" என்றார் சிங்காரு.

உண்மையில் அந்த மேடு அப்படியொரு மேடு. பரந்து விரிந்த சோழகங்கப் பொன்னேரியின் நடுவில் கோடு கிழித்ததைப் போல சாலை இருக்கும். திணறித் திணறித்தான் பேருந்து ஏறியது. ஒரு வழியாக ஏரியைக் கடந்து மெதுவாக நகர்ந்தது.

"காலம்பற வெளிய வாச போகமாட்டானுவோளா வக்காள ஓழிவோ... பொண நாத்தம் அடிக்கிது. ச்சைக்..." என்றார் பெரிய நாட்டார். 

புகையிலைக் கரை படிந்த பற்களால் சிரித்துக் கொண்டிருந்தனர் சில பெண்கள். புதுச்சாவடி தாண்டி பாரஸ்டை கடக்கையில் முந்திரி வாசம் பேருந்தை நிரப்பியிருந்தது.

"பெரியவளயம் எறங்குது" என கையில் நரம்பு பை நிறைந்த பழந்துணிகளை வைத்திருந்த பெண் ஒருவர் குரல் கொடுத்தார். பேருந்து நின்றதும், இவள் வருகைக்காகவே காத்திருந்தது போல சிலர் கூடி பெருங்குரலெடுத்து அழுது அணைத்துக் கொண்டனர். 

"புருசம் பொண்டாட்டி சண்டயாதான் இருக்கும். காச்சுற அடுப்படிக்கே போயிட்றானுவோ குடிக்க. பின்ன எவ குடும்பம் நடத்துவா..." என்றார் செகந்நாதன்.

"நாந்தான் அவ புருசன்" என பேருந்துக்குள் ஒரு குரல் கேட்டது. நின்ற இடத்திலிருந்து நகர்ந்து பெரிய நாட்டாருக்கும் அருகில் சென்று நின்றார் செகந்நாதன். அதன்பிறகு அந்தக் குரல் கேட்கவில்லை. 

தர்மாஸ்பத்திரி போறவங்க கோர்ட்டுக்கு போறவங்க தாலுக்கா ஆபிசு போறவங்க எறங்கிக்கலாம் என்றார் கண்டக்டர். தருமாஸ்பத்திருக்கு போகிற வழியில்தான் போலீஸ் ஸ்டேசனும் இருக்கிறது. சிவப்பாக்கியத்தை இறங்க சொல்லிவிட்டு பெரிய நாட்டாரோடு எல்லோரும் இறங்கினர். மணி வெத்தலை கடையிலிருந்து ஏ.ஆர்.ஆர் பாக்கின் வாசம் நால் ரோட்டையே ஆக்கிரமித்திருந்தது. பட்டாணி கடையின் அனல் ஒரு பக்கம். ஸ்டேசனை நெருங்க நெருங்க ஏழு ரூபாய் ஏஒன் பிரியாணி வாசமும் கூடியிருந்தது.

"போவும்போது பிரியாணியா சோறு ஒரு பொட்டலம் கட்டிட்டு போவுணும். இந்த பய நல்லா திம்பான்." என்றார் சிவப்பாக்கியம்.

"யாங் ஆயி... ஓங் வூட்டுக்காரன் டேசன்ல இருக்குறது ஒனக்கு கொஞ்சங் கூட விதுக்குங்கல. ஊருலருந்து வெத்தல பாக்கு, டீ, சோறுன்னு பேசிட்டேதான் வர" என்றார் செகந்தாதன்.

"அதுக்காக என்ன கழுத்தயா அறத்துக்க சொல்ற. மதங் கொண்டு போயி நண்டு புடிக்க போறேன், இது புடிக்க போறேன்னு போனுது கெடக்குட்டுமே ரெண்டு நாளக்கி..." என்றார் சிவப்பாக்கியம்.

"பின்ன யாங் வேல மெனக்கிட்டு நாங்க வரோம்" என்றார் பெரிய நாட்டார். 

அமைதியாக ஸ்டேசன் வந்தடைந்தனர். 

வடவாத்தங்கரையாரின் குடும்பமே அங்கு நின்று கொண்டிருந்தது. அவர்கள் வாங்கிக் கொடுத்த டீயைக் குடித்துக் கொண்டிருந்தார் தங்கவேல். ஊர்க்காரர்களையும் சிவப்பாக்கியத்தையும் பார்த்தவர், பதறியடித்து வெளியில் வந்தார்.

"யோவ்... என்ன ஒன் இஷ்டத்துக்கு வெளில போற" என அதட்டினார் போலீஸ் ஒருவர்.

"இல்லங்க எங்க ஊர் நாட்டுமக்கார்ரு, யாங் பொண்டாட்டிலாம் வந்துருக்காங்க அதாங்..." என்றார்.

"சட்டுன்னு பாத்துட்டு உள்ள வந்து ஒக்காரு. இன்ஸ்பட்ரு வர நேரம். வந்து விசாரிச்சிட்டாருன்னா வூட்டுக்கு போயிடலாம்" என்றார்.

ஊர்க்காரர்களையும் சிவப்பாக்கியத்தையும் பார்த்தது தங்கவேலுக்கு புதுத் தெம்பைத் தந்தது. வடவாத்தங்கையாரின் குடும்பத்தை அழைத்து சிவப்பாக்கியத்தைக் காட்டினார். சிவப்புத் துண்டு போட்ட கட்சிக்காரர்களும் நின்று கொண்டிருந்தனர்.

"ரொம்ப நேரம் வெளில நிக்க வாணாம்னாங்க... எல்லா வெவரத்தையும் இவங்க சொல்லுவாங்க" என வடவாத்தங்கரையாரின் குடும்பத்தைக் காட்டிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தார் தங்கவேல். 

வடவாத்தங்கரையாரும் தங்கவேலும் ஒருவரை பார்த்துக் கொண்டனர். ஆற்றில் கிடந்து எடுத்த அருவா உள்ளே ஒரு மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்தது. சிவப்புத் துண்டுக்காரர்கள் இரு குடும்பமும் நிற்கும் இடம் நோக்கி வந்தனர். தூங்கு மூஞ்சி மரத்தடிக்கு எல்லோரையும் அழைத்தார்கள். திசைக்கொன்றாகக் கிடந்த கருங்கல்லில் உட்கார்ந்தனர்.

"இவங்கள டேசன் அழச்சிட்டு வரும்போது யாரு அந்த எடத்துல இருந்தா. யாங் அழச்சிட்டு போறோம்னு போலீசுகாரங்க சொன்னாங்களா" என்றார் நல்லுசாமி.

"யாம் மொவந்தான் அழுதுட்டே வந்து வூட்ல சொன்னான். அதுக்கப்புறந்தான் அலறியடிச்சு ஓடியாந்தோம். வடவாத்துல வச்சுதான் அழச்சிட்டு போனாங்க. வெவரம் கேட்டோம். பெரிய கத்திய காட்டி, இதாலதான்னு சொன்னாங்க. என்ன வெவரம்னு புரிலிங்க. ஆனா கத்தி ஏதுன்னு எனக்கு தெரியுங்க." என்றாள் வடவாத்தங்கரையாரின் மனைவி.

"கன்னி கழியாதவன உள்ள தள்ளுலாம்னுதான் நெலயா நிக்கிற" என்றார் வடவாத்தங்கரையாரின் அம்மா.

"சின்ன மொவனுக்கு காரியஞ் சாதிக்க நிக்கிறீங்க. ஒம் பெரிய மொவன் உள்ள போனா... அவன நம்பி நானும் எம் புள்ளயும் இருக்கமே... யாரு கஞ்சி ஊத்துவா..." என்றாள் வடவாத்தங்கரையாரின் மனைவி.

"மொதல்ல ஒங்களுக்குள்ளயே பேசுறத நிறுத்துங்க. ஏதாச்சும் வெளங்குற மேறி சொன்னாதான் அவங்கள வெளில அழச்சிட்டு வர முடியும்." என்ற நல்லுசாமி, "நீ சொல்லும்மா கத்தி எப்படி வந்துச்சு" என்றார்.

"எல்லாத்துக்கும் கோயில் திர்ஷாதாங்க காரணம் மொதல்ல. மொட்டயா ஆத்துல கத்தி கெடந்துது, அத கங்கண்றத்தாரு எடுத்தாரு. கூட என் வூட்டுக்கார்த்து இருந்துச்சுங்கறத விட, கத்தி எப்படி ஆத்துக்கு வந்துச்சின்னு தெரியணும்ல" என சுற்றிலும் பார்த்தவள் பேசத் தொடங்கினாள்.


தெவசம் - 6

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசம்

இருபத்தியோராம் நூற்றாண்டின்  அழகி.!

தலைக் கவிழ்ந்த சிங்கம்