யார் வீடு பெரியது!
“காக்கையோட வீடு அந்தக் கூடுதானா நிலன்” என்றான் வலன்.
“ஆமாம்டா, சரி வலன் யார் யாருக்கு எங்கெல்லாம் வீடு இருக்கு. யார் வீடு பெருசுன்னு பாப்போமா?” என்றான் நிலன்.
“போகலாம், அப்படியே பாத்துட்டு நம்ம வீட்டுக்குப் போயிடலாம்” என்றான் வலன்.
“அதோ பார் நத்தையை, எங்கே போகிறாய் நத்தையே உன் வீட்டுக்கா?”
“என் வீட்டில்தானே நான் இருக்கிறேன்” என்றது நத்தை.
ஆமையும் வந்து சேர்ந்தது. “என்ன நத்தையாரே ஏன் நிற்கிறாய்.” என்றது ஆமை.
“இதோ ஆமையும் வந்துவிட்டது. எனக்கும் ஆமைக்கும் ஒரே மாதிரியான வீடுதான்” என்றது நத்தை.
“அது ஒன்றுமில்லை தம்பிகளா… எங்கள் மேல் உள்ள ஓடுதான் எங்கள் வீடு. நடக்கும்போது வெளியே வருவோம். மற்ற நேரத்தில் உள்ளே இருப்போம்.” என்ற ஆமை, “வா நத்தை நண்பா போகலாம்” என்றது.
“என்ன தம்பிகளா… ஆமையும் நத்தையும் என்ன சொன்னாங்க” என்றது குளத்திலிருந்து நிலத்திற்கு வந்த தவளை.
“உனக்கு மட்டும் இரண்டு வீடா?” தவளையைப் பார்த்து நிலனும் வலனும் கேட்டனர்.
“ஆமாம், நான் நீரிலும் இருப்பேன். நிலத்திலும் இருப்பேன்” எனத் தாவிக் குளத்தில் குதித்தது.
தவளைக் குதித்ததும் மேலே எட்டிப் பார்த்தது மீன்.
“நான் நீரில் மட்டும்தான் வாழ்வேன். அதுதான் என் வீடு” என்று சொல்லிவிட்டு நீருக்குள் மூழ்கியது மீன்.
நிலனும் வலனும் பேசிக்கொண்டே வீடு நோக்கி நடந்தனர். குறுக்கே வந்த அணில், “என் வீடு மரங்கள்தான். நீங்க கேக்கலன்னாலும் சொல்லுவேன்” என்று துள்ளிக் குதித்து ஓடியது.
“நாம மட்டும் இல்லாம எல்லா உயிர்களுக்கும் இந்த பூமியில்தான் வீடு இருக்கு. அப்படின்னா பூமிதான் பெரிய வீடு” என்றான் நிலன்.
இருவரும் கைகோர்த்துக் கொண்டு, துள்ளித் துள்ளி விளையாடி வீடு போய்ச் சேர்ந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக