பச்சைக் கொம்பனும் பாசக்கார எறும்பும்

 

குளத்து ஓரத்தில் அழகான புற்களும் மரங்களும் இருந்தன. அருகே கரும்பு நன்றாக விளைந்திருந்தது. அங்கு வசித்து வந்த எறும்பும் பச்சைக்கொம்புப் புழுவும் நண்பர்களாக இருந்தன. இரவு நேரமானால், கரும்பின் சோகையை நறுக் நறுக் என்று கடித்துத் தின்னும் பச்சைக் கொம்பன்.

“நண்பா பச்சைக் கொம்பா கொஞ்சம் தூங்க விடுகிறாயா?” என்றது எறும்பு.

“நான் என்ன செய்ய நண்பா, இரவில்தான் என்னால் சாப்பிட முடிகிறது” என்றது பச்சைக் கொம்பன்.

வேறு இடம் மாற்றித் தூங்கியது எறும்பு. மறுநாள் காலையில் தன் நண்பன் புழுவைத் தேடிச் சென்றது. அங்கு புழுவைக் காணவில்லை. பலமுறை அழைத்துப் பார்த்தது. எதிரே வந்த நண்டு, “எறும்பு நண்பா யாரைத் தேடுறீங்க” என்றது.

“எனது நண்பர் பச்சைக் கொம்பனைக் காணும்.” என்றது எறும்பு.

“குளத்தில் ஒரு இலையின் மேல் விளையாடிக் கொண்டிருந்தது” எனச் சொல்லிவிட்டு நண்டு தன் வீட்டுக்குச் சென்றது.

தானும் விளையாடலாம் என மகிழ்ச்சியோடு சென்றது எறும்பு. எறும்பைப் பார்த்த பச்சைக் கொம்பன், “வா நண்பா வந்துட்டியா… உனக்காகத்தான் காத்திருந்தேன்.” என்றது பச்சைக் கொம்பன்.

“ஓ… ஜாலி… நானும் விளையாட வரவா நண்பா… என்னிடம் சொல்லியிருந்தான் நானும் வந்திருப்பேனே?” என்றது எறும்பு.

 “ஐயோ நண்பா நான் விளையாடவில்லை. ஒரு மரத்தின் இலையைத் தின்று கொண்டிருந்தேன். அது காற்றில் உதிர்ந்து பறந்து குளத்தில் விழுந்துவிட்டது. நான் எப்படி மேலே வருவது. எனக்குப் பயமாக இருக்கிறது.” என்றது பச்சைக் கொம்பன்.

“ஐயோ நண்பா பயப்படாதே… நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்” என்ற எறும்பு, தனது எறும்புக் கூட்டத்தை அழைத்து விவரத்தைச் சொன்னது. எல்லா எறும்புகளும் சேர்ந்து நிறைய இலைகளைக் குளத்தில் போட்டன. ஒவ்வொரு இலையாகத் தாவி பச்சைக் கொம்பன் கரைக்கு வந்தது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசம்

இருபத்தியோராம் நூற்றாண்டின்  அழகி.!

தலைக் கவிழ்ந்த சிங்கம்