கார்முகிலும் நீலத்திமிங்கலமும்

 


கார்முகில் தன் தாத்தாவோடு மலை உச்சிக்குச் சென்றாள். அவர்கள் வீடு அழகான மலைக் கிராமத்தில் உள்ளது. உயரமாக வளர்ந்திருந்த கோரைப் புற்களை கைகளால் உரசி உரசி விளையாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் அமர்வதற்கு ஒரு இடத்தைத் தேடினர். யானையின் தலையைப் போல இருந்த அழகான பாறை மீது அமர்ந்தனர்.

“கார்முகில்…” என்றார் தாத்தா.

“சொல்லுங்க தாத்தா…” என்றாள்.

“உன்னைக் கூப்பிடவில்லை. அதோ பார் கார்முகில்.” என்றார்.

“என் பெயர்தானே கார்முகில்” என்றாள்.

“அதோ அந்த கருத்த மேகத்தின் பெயரும் உன் பெயரும் கார்முகில்தான். முகில் என்றால் மேகம். கார்முகில் என்றால், கருத்த மழை தரும் மேகம்னு அர்த்தம்” என்றார்.

கார்முகில் வியப்புடன் தாத்தாவையும் மேகங்களையும் பார்த்தாள்.

“தாத்தா, அதோ பாருங்க அந்த மேகம் நம் வீட்டுக் கன்றுக்குட்டியைப் போல் உள்ளது”

“இதோ இங்கே பார் நம் தோட்டத்தில் இருக்கும் ஆலமரத்தைப் போல மேகம்” என்றார் தாத்தா.

“அங்கே பாருங்கள் தாத்தா, மிகப் பெரிய மீன் போல மேகம்.”

“அது மீன் என்று நினைக்க வேண்டாம். நீலத்திமிங்கலம் இப்படித்தான் பெரிதாக இருக்கும்”

“பெரியது என்றால் எவ்வளவு பெரியது தாத்தா”

“அதன் இதயத்தில் நீ அமர்ந்து விளையாடலாம். அவ்வளவு பெரிது”

கார்முகில் ஆச்சரியமாக அந்த நீலத்திமிங்கல மேகத்தையே பார்த்தாள்.

“பூமியில இருக்க உயிரினங்கள்ல நீலத்திமிங்கலம்தான் பெருசு”

“ஆனால் தாத்தா, அதன் மூக்கு ஏன் முதுகில் இருக்கு”

“ஏன்னா அது காற்றைதான் சுவாசிக்கும். அது மூச்சு விடுகிற சத்தம் ரொம்ப தூரம் கேக்கும். மூச்சை இழுத்துக்கிட்டு கடலுக்கு அடியில் போகும். திரும்ப மேல வந்து சத்தமா மூச்சு விடும். அப்போ அருவியில் தண்ணி கொட்ற மாதிரி இருக்கும்.” என்றார்.

கார்முகில் அந்த நீலத்திமிங்கல வடிவ மேகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அது விலகிச் செல்வது கடலுக்குள் மூழ்குவது போல் இருந்தது. தாத்தாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசம்

இருபத்தியோராம் நூற்றாண்டின்  அழகி.!

தலைக் கவிழ்ந்த சிங்கம்