தெவசம் - 3
ஆற்றங்கரைக்கு மேல் வடக்கே தொரப்பு - வேலப்பூண்டிக்குச் செல்லும் சாலையும் தெற்கே பல்வாய்கண்டம் - கஞ்சங்கொல்லை செல்லும் சாலையும் வெறிச்சோடியிருந்தது. கிளுவை மரத்தடியில் அரிவாள் துணையில்லாமல் முறைத்து நின்றார் கரும்பாயிரம். மகனைக் கையில் பிடித்துக்கொண்டு கரும்பாயிரம் கோயிலை நோக்கி நடந்தார் வடவாத்தங்கரை ஆள். தோளில் கிடந்த துண்டையெடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு,
"ஐயா சாமி... தாய பழிச்சதில்ல தண்ணிய பழிச்சதில்ல. யாரு வம்பு தும்புக்கும் போனதில்ல... எத்தினி நாளக்கிதான் ஒதப்பட்டு கெடக்குறது. இந்த தடவ வுட்டா மின்ன ஆன மேறி இப்பயும் வூடு வாச இல்லாம நிக்கணும். ராத்திரி தெருவுக்குள்ள பூர்றதுக்கு திட்டம் போட்ருக்கானுவோ மேலத்தெருவானுவோ... ஒருத்தனையாச்சும் புடிச்சி வெட்டுனாதான் கொஞ்சமாச்சும் பயமிருக்கும்னு... என் தம்பிக்காரன் சொன்னான்னுதான் உன் பொருளுல கைய வச்சேன். வெட்டுன பயலுவோ ஓடி ஒளியிற வேகத்துல ஆத்துல போட்டுட்டு பூட்டானுவோன்னு என் பொண்டாட்டிக்காரி சொல்லிதான் தேட வந்தேன். உன் புண்ணியத்துல அது எங் கையில கெடச்சிருந்தா... படி அளக்குற எஞ்சாமின்னு நெடுஞ்சாங்கடையா வுழுந்து ஒப்படச்சிருப்பேன். கோட்டு வா தொடைக்காம கண்ணு வூளைய தொடைக்காம காலம்பற எழுந்து இந்த பச்ச வாவட சீவனையும் கூட்டாந்தன். கை காலெல்லாம் ஊறிப் போச்சு தண்ணில நின்னு. அகப்படல. யாரோ வெளியூருக்கார ஆளு கைல கெடச்சி கையோட கொண்டுட்டு போறான். எம் பாவம் எனக்கு. அந்தாள சிக்கல்ல இழுத்து வுடாம உன் புள்ளையா நெனச்சி வழிகாட்டு...." என வேண்டி முடித்தான்.
கிளுவை மரத்திலிருந்த ரவணாத்தி ஒன்று தன் இறகைப் படபடத்து கீழிறங்கி கரும்பாயிரம் தலைப்பாகையில் அமர்ந்தது. சிறுவன் நடுங்கியபடி அப்பாவின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டான். தூரத்தில் ரோந்து வண்டியிலிருந்து போலீஸ் இறங்கி தங்கவேலுவிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த வடவாத்தாங்கரை ஆள், தங்கவேல் ஆற்றை நோக்கிக் கையைக் காண்பிப்பதையும் போலீஸ் அவரை ஜீப்பில் ஏறச் சொல்வதையும் சைகைகளால் புரிந்துகொண்டு நின்றிருந்தான்.
ரோந்து வண்டி ஆற்றை நோக்கி வருவதுபோல் இருந்தது.
மகனை அழைத்துக்கொண்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார். வண்டி நெருங்கிக் கொண்டிருந்தது.
"பா...பா..." என ஆடுகளைத் தேடுவதுபோல் சத்தமாக அழைத்துக் கொண்டிருந்தார் வடவாத்தங்கரை ஆள். அவரைக் கை காண்பித்து தங்கவேல் எதையோ சொல்ல... போலீஸ் அவரை நோக்கி கை காண்பித்து அழைத்தது.
மகனிடம், "நீ போயி அம்மாட்ட சொல்லி ஆத்துக்கு அழச்சிட்டு வா" என சொல்லி அனுப்பினார்.
"இங்க என்னடா வேல... யாங் இங்க நிக்கிற..." என போலீஸ் அதட்டவும், "ஆடு மேக்கிறேங்க..." என மிரண்டு பதில் சொன்னார்.
"எந்த ஊரு ஒனக்கு"
"இங்கதாங்க. இந்த ஊருதான்..."
"இந்த அருவாள இவரு ஆத்துல கெடந்து எடுத்தேங்குறாரு... நீதான் பாத்தேங்குறாரு..."
"ஆமாங்க... அவரு பேரனும் அவரும் நத்த புடிச்சாங்க. நானும் எம் மொவனும் ஒரு பக்கம் நத்த புடிச்சோம். தூரத்துல இருந்து பாத்தேன். தண்ணியிலருந்து கர மேல என்னத்தையோ தூக்கி போட்டாரு. கிட்ட வந்து பாத்தேன் கரும்பாயிரங் கோயிலு அருவா..."
"அந்த காளியாயிக்கு கண்ணு இல்லியா... இப்புடி பாவப்பட்டவங்களையே சோதிக்குதே..." என அழுது கொண்டே ஓடி வந்தாள் வடவாத்தங்கரை ஆளின் மனைவி. உடன் அவரது மகன், அவரது அம்மா என மேலும் ஒன்றிரண்டு பேர் வந்தனர்.
"இந்தாம்மா... யாங் அழுவுற இந்தாள நாங்க என்ன செஞ்சோம். வெசாரிச்சிட்டுதான இருக்கோம்."
"சார் இப்புடிதான் வெசாரிக்கிறேன்னு எங்க அண்ணனை கொண்டுட்டு போயி பொணமா அனுப்புனாங்க... அதோட நொடிஞ்சிது எங் குடும்பம் அதுலேர்ந்து ஊர் சண்டக்கி போவாம... மேலத்தெருவுக்காரங்க பெரச்சனை பண்ணாலும் அடங்கி மடங்கி இருங்கன்னுதான் எங் வூட்டுக்காரதுக்கிட்ட சொல்லிருக்கேன். அன்னக்கி ராத்திரி என்ன தூங்க வச்சிட்டு வெளி கெளம்புன ஆளு... இப்படி கரும்பாயிரங் கோவத்துக்கு ஆளாயி நிக்கிது..." எனச் சொன்னதுதான் தாமதம்.
"அடி வல்லார ஓழி... அதெல்லாம் ஒன்ன கேட்டாங்கள..." என ஓங்கி ஒரு உதை இடுப்பில் உதைத்தான்.
"ஐயோ... மகமாயி... மகமாயி..." எனக் கீழே சரிந்தாள்.
"என்னடா சொல்றா ஒம் பொண்டாட்டி" என போலீஸ் அதட்டவும், "ஒன்னுமில்லீங்க... கரும்பாயிரம் எங்க கொல தெய்வம். அங்க இருந்த அருவாதான் இது. அத வச்சிதான் யாரோ மேலத்தெரு மோகனு ஐயாவ வெட்டிருக்காங்க. கொல தெய்வங் கோயிலு பொருளு காணும்னா... நம்பளதான சாமி கேக்கும். அதுக்கு சொல்றா அவ.." என சமாளிப்பது போல் பேசினார்.
"சரி... சரி... இவரும் நீயும் ஜீப்புல ஏறுங்க. டேசன்ல வந்து எழுதிக் குடுத்துட்டு வந்துருங்க..." என போலீஸ் சொல்லவும். ஜீப்பை ஸ்டார்ட் செய்து திருப்ப ஆரம்பித்தனர். தங்கமணி அழ ஆரம்பித்தான். வடவாத்தங்கரை ஆளின் குடும்பமே கத்த ஆரம்பித்தது.
"சார்... நாங் கண்றத்துல இருந்து வரேங்... எம் பேரன் இருக்கான். வூட்ல கொண்டு போயி வுட்டுட்டு டேசனுக்கு வந்துட்றேன்." எனத் தங்கவேல் சொன்னதும் முறைத்த போலீஸ், "போற வழில எறக்கிவுட்டு போவுலாம் ஏறுங்க" என அதட்டினார்.
சத்தமாகவே அழுதுகொண்டிருந்தான் தங்கமணி. வடவாத்தங்கரை ஆள் அவரின் மனைவியை முறைத்தபடி ஜீப்பில் ஏறினார். பேரனை ஜீப்புக்குள் தூக்கி உட்கார வைத்தார் தங்கவேல். ஜீப் புறப்பட்டது. மார்பில் அடித்துக்கொண்டு ஊரை நோக்கி ஓடினாள் வடவாத்தங்கரை ஆளின் மனைவி.
கரும்பாயிரத்தின் மேல் அமர்ந்திருந்த ரவணாத்தி குருவி கிளுவை மரத்தின் உச்சியில் அமர்ந்து ஜீப் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தது.
உச்சியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த சூரியனை, 'நேரமாகிறது வா' என்பது போல் அழைத்துக் கொண்டிருந்தது சோழகங்கப் பொன்னேரி. தெற்கே கருவாட்டு ஓடைக்கு மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு மாடுகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. வேர்க்கட்டைகள் பிடுங்கச் சென்றவர்கள் தயாளன் நாயக்கர் போர் செட்டில் குளித்துவிட்டு மேல் சட்டையை சைக்கிள் கேரியரிலும் கோடரியைத் தோளிலும் மாட்டிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சாயங்கால கள்ளு குடிக்க ஆட்கள் அவுரித்தொட்டிக்குச் சென்றுகொண்டிருந்தனர். கருவாட்டுத் தொவையலும், கொண்டக்கடலையும் விற்கும் பஞ்சவர்ணம் அன்னக்கூடையைத் தலையில் சுமந்து சென்றுகொண்டிருந்தாள். காரக்காய் பறித்துக் கொண்டிருந்த சிறுவர்களை, 'பொழுது போவுது வூட்டுக்கு போனா என்ன' என விரட்டினார் ஆதிசேட கோனார். இளஞ்சிவப்பும் மஞ்சளுங் கலந்து இன்னுங் கொஞ்ச நேரத்தில் பொன்னேரியில் நீராடப் போகிறேன் என்பது போல சூரியன் மங்கிக் கொண்டிருந்தது.
துவைத்துப் போட்டத் துணிகளை எடுக்கத் தோட்டத்திற்குச் சென்ற சிவப்பாக்கியம், "பொழுது போயிட்டு இருக்கு... இன்னும் இந்தப் பயலயுங் காணும் இந்த ஆளயுங் காணும். நான்தான் காலம்பறயே சொன்னனே., எவள்ட்டயாவது வாங்கிக் குடிச்சிட்டு மல்லாந்து கெடப்பாங் எங்கியாவது. இவன் எங்கியாவது கெடந்தா கெடக்கட்டும். யாங் பேரப்புள்ள என்னாச்சுன்னு தெரிலியே... கறி வெவிக்கும்போதே எடுத்து தின்னுது. கொழம்பு ஆக்கி கெடக்கு, மத்தியானம் புள்ள பசியோட கெடந்துருப்பான். வரட்டும் இன்னிக்கி, வச்சி குடுக்குற குடுல அந்த கருமாந்தரத்த மறந்துடணும்" எனப் புலம்பிக் கொண்டிருந்தாள்.
வடக்குவெளிக்கு குச்சி பொறுக்க போறேனெனச் சென்ற சூடாமணி, மஞ்சள் துணிப் பையில் ராட்டிகளை பொறுக்கி வந்திருந்தாள்.
"இன்னும் இவுங்க வர்லியே..." எனக் கேட்டுக்கொண்டே, பொறுக்கி வந்த ராட்டிகளை ஒரு மூலையில் கொட்டிவிட்டு துண்டில் முடித்து வைத்திருந்த எலந்தப்பழங்களை அவிழ்த்து தட்டில் கொட்டினாள்.
"இந்த பய நல்லா திம்பான்னு மரத்துல ஏறி உலுக்குனேன்" என்றவள். மீண்டும் குரலை உயர்த்தி, "என்னாம்மா இன்னும் ஆள காணும்" என்றாள்.
"நானும் அதாம் பொலம்பிட்டு கெடக்குறேன். பொழுது சாயப் போவுது. இன்னும் வூடு வந்து சேருல. ஆக்குன கொழம்பு ஆக்குனவொன்னே இருக்கு ஆக்குன சோறு ஆக்குனவொன்னே இருக்கு..."
இருவருமாக வீட்டிலிருந்து தெருவுக்கு வந்து ஆளுக்கொரு திசையாகப் பார்த்து நின்றனர். தமுரு, சைடு, சால்ரா, குச்சி பையோடு குண்டவெளிக்கு செட்டுக்குப் போன சிங்காரு, ராசமாணிக்கம், துரைசாமியும் வந்து கொண்டிருந்தனர்.
"யாங் ஆயி... புள்ளயுந் தானும் தெவச்சி நிக்கிறீங்க..." எனக் கேட்டார் சிங்காரு.
"காலயில வெளிக் கெளம்புன ஆம்பள. நண்டு புடிக்க போறன்று கெளம்புனுது. இன்னுங் வூடு வந்து சேருல. போன ஆம்பள தனியா போவுலாம்ல... இந்த பயலயும் இழுத்துட்டு போனுது. நேரா நேரத்துக்கு வந்து சேரணும்ல..." என சிவப்பாக்கியம் சொன்னதும்,
"நாங்க குண்டுவெளி செட்டுக்கு போயிட்டு இப்படியே குறுக்க பூந்து வரோம். வர வழில தெக்கேரிலயுங் காணும். கள்ளாங் கொளத்துலயுங் காணும்... வேற எங்கியாச்சும் போயிருப்பாங்க. வந்துடுவாங்க." என்றார் ராசமாணிக்கம்.
தமுருக்கார்ரு சிங்காரை பார்த்ததும் ஓடி வந்து மேலேறியது நாயொன்று. குச்சிப் பையிலிருந்து பொட்டலம் ஒன்றை எடுத்துப் பிரித்துத் தரையில் வைத்தார். வாலை ஆட்டியபடி நறுக் நறுக்கென்று மென்றது. காக்கா பிள்ளை கடை காராபூந்தி இல்லாமல் ஒருநாளும் வீடு வரமாட்டார் சிங்காரு. செட்டுக்கு போய் வருகிற நாளென்றால் கூடுதலாக ஒரு பொட்டலம் வாங்கி வருவார். ஒருமுறை காராபூந்தியோடு கள்ளும் வாங்கி வந்திருந்தவர், குடித்தது போக மிச்சத்தை தட்டில் ஊற்றி காராபூந்தியை கலந்துவிட்டார். அந்த நாள் முழுக்க தோட்டத்தில் சரணாத்தி அடித்துக் கொண்டிருந்தது அந்த நாய்.
"பொருளுவோள வூட்ல வச்சிட்டு ரோட்ட பக்கம் போயி பாத்துட்டு வரேன்" என சிவப்பாக்கியத்திடம் சொல்லிவிட்டு புறப்பட்டார் சிங்காரு.
வீடு வந்துவிட்டதென்பதை உணரந்த ஆடுகள் வேக வேகமாக ஓடின. ஆடுகள் வேறு எங்கும் செல்லாதவாறு விரட்டிக் கொண்டே வந்தார் பொன்னுசாமி. ஒவ்வொரு ஆடாகப் பிடித்து கழுத்தில் சுற்றியிருந்த கயிற்றை அவிழ்த்து கொட்டகையின் உள்ளே அடிக்கப்பட்டிருந்த மொளக்குச்சிகளில் கட்டினார் பொன்னுசாமியின் மனைவி. வேப்பந் தழைகளைப் பிரித்து எறவானத்தில் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருந்தார் பொன்னுசாமி. சோறு வடித்த நீரில் உப்பு போட்டு கொண்டு வந்து கொட்டகையில் வைத்துவிட்டு, "யாங் இந்தக்கா இம்மோம் வேகமா வருது..." என்றாள் பொன்னுசாமி மனைவி.
முந்தைய நாள் கட்டிய வேப்பந் தழைகளின் வெறுங் கழிகளை அவிழ்த்து வெளியில் போட்டுக்கொண்டே, "யாங் அண்ணி... இம்மோந் தூரம்..." என்றான்.
"ஆயி... இத கித பாத்தியா அந்த பக்கம்" என்றாள் சிவப்பாக்கியம்.
"ரோட்ல ஒரே கும்பலா இருந்துச்சு... அண்ணந்தான் நின்னாரு. இந்தப் பயலும் நின்னான். போலீசு வண்டிலாம் நின்னுச்சு... ஆடுவோ அங்கியும் இங்கியும் ஓடுச்சுவோன்னு நின்னு கூட கேக்கல என்னான்னு..." என்றார் பொன்னுசாமி.
"யாங்க்கா... என்னாவாம்..." என்றாள் பொன்னுசாமி மனைவி.
"காலம்பற நண்டு புடிக்க கெளம்புனுச்சு. இன்னும் ஆள காணும்னுதான் கேக்குறேன். தனியா போனா கூட வந்துடும்னு இருப்பேன். இந்த பய கூட போனாங்... அதாங்..."
சிவப்பாக்கியமும் சூடாமணியும் வீட்டை இழுத்துச் சாத்திவிட்டு வேக வேகமாக நடக்கத் தொடங்கினர். இவர்கள் செல்வதைப் பார்த்த ராசமாணிக்கம், சிங்காரை அழைக்கச் சென்றார். தளர்ந்திருந்த தமுரு கயிறுகளை இழுத்துக் கட்டிக் கொட்டிருந்தார் சிங்காரு. சைடு மேளத்தின் தோலின் மீது கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்ட பகுதியில் கீறல் இருப்பதைப் பார்த்துப் புலம்பிக் கொண்டிருந்தார்.
"அவன் அவன் பண்டம்னா வலி வருத்தம் என்னான்னு தெரியும். கூலிக்கி செட்டுக்கு வந்தா எப்பிடி தெரியும்" என்றவர் ராசமாணிக்கத்தை பார்த்ததும், "இந்த சைடு யாரு வச்சிருந்தா, ஒத்த பக்கம் கீறலா இருக்கு பாக்குலியே..." என்றார்.
சைடை வாங்கிப் பார்த்த ராசமாணிக்கம், "ராத்திரி சாமி வந்து ஆடுன பொண்டுவோ மேல வந்து வுழுந்துச்சுவோ... அப்ப கீறலு வுழுந்திருக்கும்" என்று சொல்லிவிட்டு, "சேப்பாக்கியமும் அது மொவளும் வேக வேகமா ஓடுதுவோ... யான்னு தெரில" என்றார்.
இழுத்த கயிறை அப்படியே ஓரிடத்தில் கட்டிவிட்டு சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு ராசாமாணிக்கத்தோடு புறப்பட்டார் சிங்காரு.
"என்னா இழுவாரு இழுத்து வச்சிருக்கான்னு தெரிலியே... இந்த பய கெதிய நெனச்சாதான் ஒரே கவலையா இருக்கு..." என புலம்பிக்கொண்டே நடந்தாள்.
வழிமறித்த கோசலை, "ஒம் பேரன் அழுதுகிட்டே வராங்... யான்டா... யான்டாங்குறேன் வாயந் தொறக்கல சூத்துந் தொறக்கல..." என்றாள்.
சூடாமணி கலங்க ஆரம்பித்தாள். கையில் பையோடு தேம்பிக் கொண்டே வந்து கொண்டிருந்தான் தங்கமணி. ஓடிப் போயி பேரனை அணைத்தவள்.
"யாஞ் சாமீ... யாஞ் சாமீ..." எனக் கத்த ஆரம்பித்தாள் சிவப்பாக்கியம்.
"தாத்தாவ போலீசு புடிச்சிட்டு போவுது..." என்றவன் சூடாமணியின் கையை இறுகப் பிடித்துக்கொண்டான்.
தெவசம் - 4
கருத்துகள்
கருத்துரையிடுக