தெவசம் - 4
இலுப்பை மரங்களிலிருந்து வெளவால்களின் சத்தம். செங்கல் கால்வாய் வேலை முடித்து இரவு உணவுக்கு அடுப்பேற்றியிருந்தனர் பணியாட்கள். கோழிகளை கூட்டுக்குள் அடைத்தும் சேவல்களைக் கூடையிலும் கவிழ்த்துக் கொண்டிருந்தார் வடவாத்தங்கரையாரின் அம்மா செல்லபாங்கி. பங்காளி வீடும் இவர் வீடும் இணைந்து சுத்துக்கட்டு வீடாய் இருந்தது. கருப்பஞ் சோகையால் வேயப்பட்ட உயரமான திண்ணையுள்ள வீடு. மண் சுவற்றில் ஆங்காங்கு அடுக்குத் தேனிகளின் கூடு. முன்பக்க மாடத்தில் நல்ல விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வீட்டுக்குள் விசும்பிக் கொண்டிருந்தாள் வடவாத்தங்கரையாரின் மனைவி வசந்தா.
"வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம ஒன்னு கெடக்க ஒன்னு சொல்லப் போயி, அழச்சிட்டு பூட்டாங்க... நான் ஆர போயி புடிப்பேன். எப்படி கொண்டாருவேன்." என்றவள், பிள்ளைகளை மடியில் கிடத்தி தூங்க வைத்துக் கொண்டிருந்தாள்.
"சோத்துல தண்ணி வூத்துட்டா... திங்கிறீங்களா" எனக் கோழிகளைக் கவிழ்த்துவிட்டு வந்து கணவரைப் பார்த்துக் கேட்டார் செல்லபாங்கி.
"இவுனுவோ பாட்டுக்கு செவனேன்னு ஆக்கி எறக்குனத தின்னுக்கிட்டு பொழப்ப பாக்க வேண்டிதான. எதுக்கு இந்த வம்பு தும்பெல்லாம். எங்க கொல வுழ யாரு தலைல விடியுறது... இம்மோம் வயிசு ஆவுது. நாளைக்கோ இன்னைக்கோன்னு கெடக்கு என் உசுரு. இத்தன வருசத்துல ஒருநாளாச்சும் பெரிய தெரு ஆளுவோகிட்ட சண்ட சல்லுக்கு போயிருப்பனா..." எனப் புலம்பினார் அய்யாக்கண்ணு.
தொடர்ந்தவர், "சதாசிவத்த கால் சட்டயோட இழுத்துட்டு போனது போலீசு. கையில துண்ட கட்டி ஜீப்பிலயும் கட்டி இழுத்துட்டு போனாங்க. ஊரே வேடிக்க பாத்துது. ஒரு பய யாங்னு கேட்ருப்பானா. அவரு என்ன கள்ள சாராயங் காச்சினார்னா போலீசு இழுத்துட்டு போச்சு. இல்ல திருடிப்புட்டார்னு இழுத்துட்டு போச்சா."
"நீயுந்தான ஒரு ஆம்பள... பாத்துட்டு நின்ன. அப்புறம் ஊரு வேடிக்க பாக்காதா..." என செல்லபாங்கி சொன்னதும் குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்தவர்.
"அட்டியா நீலாந் தெரிஞ்சிதான் பேசுறியா... சதாசிவம் அன்னக்கி அடிச்சது நல்லையா புள்ள மொவன. அந்தாளுக்கு இந்த ஏழு கிராமத்திலும் சொத்து பத்து இருக்கு. அவன் கண்ண காட்டுனா ஆடுறதுக்கு ஆயிரம் பேரு இருக்கான். அவன் மொவன இழுத்துப்போட்டு அடிச்சா, அவஞ் சும்மா இருப்பானா. பொம்பள சமாச்சாரம்னு அந்தாளு போலீசுல சொன்னதோட போச்சுன்னு அன்னக்கி ஒன்னும் பேச முடியாம இருந்தோம்."
"சதாசிவம் அண்ணனா பள்ளத் தெரு பொண்ண தோப்புக்கு இழுத்துட்டு போச்சு. நல்லயாபுள்ள மொவந்தான இழுத்துட்டு போனாங்..."
"அதுக்கு இவரு ஒண்டியா நின்னு எல்லாஞ் செஞ்சிடுவாரா... அந்த தெருவுல நாட்டுமக்காரன் இருக்கமாட்டாங்... இங்க பறத்தெருல நாட்டுமக்காரன் இருக்கமாட்டாங்... படிக்கிற புள்ள வாழ்க்க போவும்ணு நெனைக்கணும்ல..." அய்யாக்கண்ணு சொல்லி முடித்ததுதான் தாமதம்,
"நீலாங் ஆம்பளன்னு ஒரு இந்த நாயம் போட்ற பாரு. அந்தக் கதையெல்லாம் இப்ப வுடு. ஒம் மொவனுவோ கதக்கி வா... நம்பள மேறியே எல்லாரும் இருந்துடுவாங்களா... ஒம் பேர சொல்லி ரவ வலிச்சால்லாங், நம்ம பேர புள்ள வயிசு பயல்லாங் கூப்புட்டா நம்ம புள்ளிவோ பொறுத்துக்குமா... வவுத்துக்கு ஒன்னுமில்லன்னு தெருவே கெதியா கெடந்தோம். இன்னக்கி சம்பார்த்தன இல்லாமயா இருக்கு. வெறுந் நாயாவா இருக்கோம். ஆத்தரத்துல அருவா தூக்குனது தப்புதான். அன்னக்கி அம்மோம் ஆடுவோளும் கோழிவோளும் கறுவி கெடந்துச்சே என்னா பாடுபட்ருக்கும் வளத்தவளுவோ மனசு. யாங்... இந்த புத்தூரா எம்மோந் நாளா ஆண்ட வூடே கெதின்னு கெடந்தா... அந்த வூட்டு புள்ளிவோ, இவ கொண்டு போற கேவுரு அடையின்னும் முறுக்கு பலாரம்னும் தின்னு வளருல. இந்த கால்னி தெருவையே கொளுத்துனானுவோள புத்தூராளும் இங்கதான இருந்தா, போனா போவுதுன்னு வுட்டுட்டா போனாங்க. நீயும் அல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சி பேசுற பாரு பேச்சி... ரெண்டு ஆம்பள புள்ளிவோல்ல ஒன்னு செயில்லதான் கெடக்கட்டுமே..." என பேசி முடித்தார் வடவாத்தங்கரையாரின் அம்மா.
வீட்டுக்குள் அழுதுகொண்டிருந்த வடவாத்தங்கரையாரின் மனைவி வசந்தா, முடியை அள்ளிக் கொண்டை போட்டபடியே,
"யாங்... கன்னி கழியாம கெடக்கே ஓஞ் சின்ன மொவன் அத போயி கெடக்க சொல்லாம் செயில்ல... இந்த புள்ளிவோள வச்சிக்கிட்டு நாங் தெவக்கிறேன். என்னடா கடவுளே பண்றதுன்னு. அம்மோஞ் சல்லிசா சொல்றீங்க..." எனக் கடிந்தாள்.
"ஆயி... ரெண்டும் எனக்கு புள்ளிவோதான். அவந்தான் வெட்டுனான்னு போலீசு சொல்லுல. அவனும் அத செய்யில. நீதான் வாய வுட்டு அவன இழுத்து வுட்ருக்க. விடிஞ்சதும் கெளம்பி சேசனுக்கு போயி கையோட இட்டாறேன்." என்றார் வடவாத்தங்கரையாரின் அப்பா அய்யாக்கண்ணு.
"அருவா ஆத்துல கெடக்குன்னு எங்கிட்ட சொன்னது உங்க சின்ன மொவந்தான். அத நாஞ் சொல்லிதான் யாங் வூட்டுக்கார்த்து தேட போச்சி... உங்க சின்ன மொவன சேசன்ல போயி சொல்லிட்டு யாங் வூட்டுக்கார்ர அழச்சிட்டு வர சொல்லுங்க" என்றாள்.
வீட்டின் பின்பக்கம் நீரூற்றும் சத்தம் கேட்டு செல்லபாங்கி சென்றாள். "ஆரது இந்த நேரத்துல..." எனச் சத்தமிட்டபடி நெருங்கினாள்.
"நாந்தாம்மா..."
"யப்பாடி... எங்க சாமி போன. ஒண்ணன போலீசு புடிச்சிட்டு போயிருக்கு" என அழுதவளிடம்,
"தெரியும்மா... எல்லாங் கேள்விப்பட்டுதான் வரேன். கூட யாரையோ அழச்சிட்டு போனாங்களாம். கங்கண்றம்னாங்க ஆளு யாருன்னு தெரில" என வீட்டுக்குள் நுழைந்தான் முத்தமிழன்.
தண்ணி ஊற்றாமலிருந்த சோற்றைத் தட்டில் போட்டுக் கொண்டு வந்து வைத்தாள் வசந்தா. குழம்பை ஊற்றிய செல்லபாங்கி, "ஓங் அண்ணிக்காரிதான் அழுது களையிறா... விடிஞ்சதும் ஒண்ணன் வூட்ல இருக்கணும் சொல்லிட்டேன்"
"புள்ளிவோ சோறு தின்னுச்சா..." எனக் கேட்டவன். நான் மன்னார்குடி போறேங். அங்க போயி கட்சி ஆளுவோள பாத்து வெவரத்த சொல்லி அழச்சிட்டு வர வழிய பாக்குறேன்.
"யப்பாடி... கருமுறுன்னு இருக்கானுவோ... முக்குட்டுல நாலஞ்சி போலீசு நிக்கலன்னா தெருவே இல்லாம பண்ணிடுவானுவோ போலருக்கு... பாத்து போயி பாத்து வா." என்றாள் செல்லபாங்கி.
நில்லுங்க வரேன் என உள்ளே சென்ற வசந்தா, எறவானத்திலிருந்து சில ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்து கொழுந்தன் கையில் கொடுத்தார். செல்லபாங்கியும் அய்யாக்கண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
வீட்டின் பின்பக்கமாக வயலில் இறங்கி, வண்டிப் பாதையில் நடக்க ஆரம்பித்தான். மாடுகள் மிதித்தும் சக்கரங்கள் சுழன்றும் கிளப்பிவிட்ட மண் நிறத்தை பாதையாக உணர்ந்து நடந்தான். தூரத்தில் நாய்கள் கூட்டமாகக் குரைக்கும் சத்தம். இரண்டு பர்லாங்கு கடந்து சாலையை அடைந்து பாரந்தாங்கி கல்லின் கீழ் அயர்ந்து உறங்கினான்.
மணி நள்ளிரவு 12 இருக்கும். தங்கமணியை மடியில் கிடத்தி தானும் உறங்கியிருந்தாள் சூடாமணி.
"சூடா... சூடா..." என மகளை எழுப்பி பாயில் படுக்கச் சொல்லிவிட்டு, தங்கமணியையும் பாயில் கிடத்தினாள் சிவப்பாக்கியம். "பய நல்லா பயந்து போயிருக்கான். விடிஞ்சதும் அருவாள பழுக்க போட்டு இழுக்கணும்" என முனகியவள். விசும்பி விசும்பி பாட ஆரம்பித்தாள்.
ஓ... நன்னே நன்னே
நானே நன்னே
மன்னாதி மன்னவரா...
எம்மா நானே நன்னே
நானே நன்னே
எம் பொண்ணா தலயெழுத்தா...
முல்லரும்ப வாங்கி வந்தா
முல்ல ரும்பா வாங்கி வந்தா
எம் மன்னாதி மன்னவரா
நான் முடியீல வச்சேனய்யா
எம் பொண்ணா தலயெழுத்தா...
தஞ்சாவூரு போனீங்களே...
தஞ்சா வூரு போனீங்களே...
எம் மன்னாதி மன்னவர
நாந் தாழம்பூவ கேட்டேனய்யா
எம் பொண்ணா தலயெழுத்தா...
ஐயா நாந் தலயில வக்கிம் பூவ
நாந் தல யில வக்கிம் பூவ
மன்னாதி மன்னவர
ஓந் தாமாட்டில போட்டேவிட்டேன்
எம் பொண்ணா தலயெழுத்தா...
எனப் பாடிக்கொண்டே அழுதவளை கோபத்தோடு இடைமறித்து, "ஒனக்கு ஏதாவது சுதி மதி தெரியிதா... அக்கம்பத்துல யாரும் தூங்கமாட்டாங்களா. ஒப்பாரி வச்சி ஊரையே எழுப்புற. செத்தாபுட்டாரு இப்ப. காலம்பற ஆளுவோள இட்டுக்குட்டு சேசனுக்கு போயி பாக்குலாம் பேசாம படும்மா..." என்றாள் சூடாமணி.
விசும்பலோடு உறங்கத் தொடங்கினாள் சிவப்பாக்கியம். தங்கமணியைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே வீதியைப் பார்த்தபடி விழித்துக் கொண்டிருந்தாள் சூடாமணி.
சில்லிட்டிருந்த பாரந்தாங்கி கல்லில் முகம் அழுந்தவும் லேசாக விழித்துப் பார்த்தான் முத்தமிழன். விடிந்தும் விடியாமலும் இருந்தது. வெளிவாசல் செல்கிற ஆண்களும் பெண்களும் தனித் தனியே பிரிந்துகொண்டிருந்தனர். ஆற்றில் முழங்காலளவு நீரில் அவ்வப்போது கால்களை அலசும் சத்தம். ரோட்டோரத்தில் மிதிபடாமல் கிடந்த புளியம்பழங்களைப் பொறுக்கி மடியில் போட்டுக்கொண்டே வந்துகொண்டிருந்தாள் இளங்கன்னியொருத்தி. பசுவின் வயிற்றிலிருந்து கொழ கொழப்போடு வெளிவரத் தயாராகும் கன்றைப் போல சூரியன் முட்டி வெளிவரத் தயாரானது. பாரந்தாங்கி கல்லருகே வந்ததும் திடுக்கிட்டவள், "எம்மோம் எடங் கெடக்கு. சொமகல்லுக்கிட்டதான் வந்து ஒக்காரணும..." என்றாள்.
கூச்சத்தோடு, "நான் ராத்திரி வந்து காலு வலில ஒக்காந்தேன். அப்படியே தூங்கிட்டேன். எனக்கு தெரியாதா... இது சொம கல்லுன்னு... வெளிய வாச போவுற எடந் தெரியாமயா கெடக்கோம்." என்றான் முத்தமிழன்.
புளியம்பழங்கள் முடித்து வைத்த மடியை இறுக்கிப் பிடித்துக் கொண்டே புறப்படத் தயாரானவளிடம், "கச்சிக்கார்ரு நல்லுசாமி வூடு எங்க இருக்குன்னு தெரியுமா..." என்றான்.
'ஆத்தாடி இது என்னாடி வம்பா பூடும் போலயே...' என நினைத்துபடி, "யாங் கேக்குறீங்க... விடியங்காட்டியும் அவர யாங் பாக்கணும். எந்தூர்ல இருந்து வர்றீங்க" என்றாள்.
"வந்ததுல இருந்து கோக்குமாக்காவே பேசுறீங்க... தெரிஞ்சா சொல்லுங்க. இல்லன்னா கெளம்புங்க. நான் வேற ஆளுக்கிட்ட கேட்டுக்கிறேன்."
"கெளம்புங்களா... இந்த எடம் என்னா ஒம் பேர்லயா பட்டா போட்டு இருக்கு. ஏழு கெராமத்துலயும் ஒன்ன பாத்ததே இல்ல. எந்த ஊருன்னே தெரில. எங்க ஊருல வந்து கெளம்பு கிளம்புன்னுக்கிட்டு..." எனக் கடிந்தாள்.
"ஒன்ன கின்னன்னு பேசுற வேள வாணாம்... பெரியவங்க சின்னவங்க பாத்து மரியாதயா பேச தெரியாதா..."
சுதாரித்தவள், "கெழக்க கொஞ்ச தொலவுல சுக்குரு கடக்கி எதுத்த கொடிக்கம்பம் இருக்கும். அத ஒட்டியே உள்ள தெருவுக்கு போற வழி. அங்க போனாலே தெரியும் அவங்க வூடு. கொடி கட்டிருக்கும் வூட்டு முன்னாடி." என்றவள், நின்று முகத்தைக் கூட பார்க்காமல் புளியம்பழங்களை பொறுக்க ஆரம்பித்தாள்.
துண்டையெடுத்து தலையில் கட்டிக்கொண்டு கிழக்கு நோக்கி நடந்தான். சுக்குரு கடை நெருங்கியதும் ஒரு டீயைக் குடித்துவிட்டுச் செல்லலாமென கடைக்குச் சென்றான். காலைச் சூரியனை வெவ்வேறு வடிவங்களில் உள்வாங்கியிருந்தது சுக்குரு கடையின் தென்னங்கீற்று. களிமண்ணால் மேடையமைத்து அடுப்பு மூட்டியிருந்தார் சுக்குரு. கருவேலங்கட்டை புகைந்து எரியத் தொடங்கியிருந்தது. செப்பாலான பாய்லர் நீர்க்கோடுகளால் நிறைந்திருந்தது. பால் குண்டான் வைத்திருந்த அடுப்பினுள் கட்டையைத் தள்ளிக்கொண்டே, "டீயா..." என்றார் சுக்குரு.
சில்வர் குடத்திலிருந்து பிடி வைத்த அமுல் டப்பாவில் தண்ணீர் எடுத்து வாய் கொப்பளித்துக் கொண்டிருந்தான். மடி கனக்க புளியம்பழங்களை எடுத்துச் சென்றுகொண்டிருந்தாள் அந்த இளங்கன்னி. பிடிவட்டாயைக் காட்டி... 'டீ வேணுமா...' என்பதுபோல் கையசைத்தான். முறைத்துக்கொண்டே விறுவிறுவென நடந்தாள். டீயை வாங்கியவன், பனைமரத்தை இரண்டாகப் பிளந்து அடித்து வைத்திருந்த பெஞ்சில் அமர்ந்தான். "என்னணே... டீ தண்ணி ஒரே பொகச்ச வாடயா அடிக்கிது..." என்றதும் கடைக்குள்ளிருந்த எல்லோரும் இவனையே பார்த்தனர்.
"தம்பி எந்த ஊர்க்காரவங்க..." என்றார் வயதாள ஆள் ஒருவர்.
"இங்கதாங்க..." என ஊரைச் சொல்லாமல், "கச்சிக்கார்ரு நல்லுசாமிய பாக்க வந்தேன்" என்றான். அதன்பிறகு அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.
"இருவத்தி ரண்டு வருசமா கட நடத்துறேன். ஒருத்தருஞ் சொன்னதில்ல பொகச்ச வாட அடிக்கிதுன்னு. சுத்துபட்டுல ரெண்டு மூனு ஊருக்கு இதான் டீ கட. இங்கயே குடிச்சி குடிச்சி செத்த நாக்கா போயிருக்கும் போல எல்லாருக்கும். டவுன்ல இருந்து எம் பேத்தி போன வாரம் வந்துருந்தா... அவ சொன்னா, ஒரே பொகச்ச வாட அடிக்கிதுன்னு..." எனக் காதோடு காதாக சொன்னார் சுக்குரு.
டீயைக் குடித்துவிட்டு அண்ணி தந்த பணத்திலிருந்து ஒரு நோட்டை எடுத்து நீட்டி மீதி சில்லறையை வாங்கிவிட்டு, புளியம்பழ இளங்கன்னி போன அதே திசை நோக்கி நடந்தான். அவள் சொன்ன கொடிக்கம்பம் ஒட்டிய அதே பாதைதான். கம்பத்தின் உச்சியில் அரிவாள் சுத்தியல் காற்றில் பறந்துகொண்டிருந்தது.
கம்பத்தில் பறந்த அதே கொடி வீட்டின் முன்பு எறவானத்தின் வெளிப்பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. கோழிக்கூட்டின் மேல் தான் பொறுக்கி வந்த புளியம்பழங்களைக் கொட்டிக் கொண்டிருந்தாள் இளங்கன்னி. தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தோளில் போட்டுவிட்டு மூங்கில் படலைத் திறந்து நுழைந்தான் முத்தமிழன். புளியம்பழ பிசுபிசுப்போடு மாடுகள் குடிக்க ஏதுவாக கழனி நீரை கைவிட்டு அலப்பிக் கொண்டிருந்தாள். புளிப்பேறிய கழனி நீர் மேலும் புளிப்பேறியது. முத்தமிழனைப் பார்த்ததும் கையைக் கூட கழுவாமல் வீட்டிற்குள் நுழைந்தாள். மேல்சட்டையில்லாமல் பழுப்பேறிய வெள்ளை வேட்டியுடன் வந்தார் நல்லுசாமி. நெற்றி, மார்பு, கைகளில் வெட்டுத் தழும்புகள் மின்னின. கறுத்த மார்பை நரைத்த நெஞ்சு முடி மறைத்திருந்தாலும் வெட்டுத் தழும்பு தனித்தே தெரிந்தது.
"தம்பி... ஆருன்னு சரியா தெரிலயே... எம்மொவ சொன்னுச்சு, ஒன்ன தேடி ஒருத்தரு காலம்பறயே வந்துருக்காருன்னு... சரி வரட்டும் பாத்துக்கலாம்னேன்..." என்று முத்தமிழனை பார்த்து கேட்டுவிட்டு உட்காரச் சொன்னார்.
நல்லுசாமியின் உடலைத் தாங்கித் தாங்கி உள்வாங்கியிருந்த நார்க் கட்டிலில் அமர்ந்தான். நல்லுசாமியும் ஒரு ஓரத்தில் அமர்ந்தார். கிரீச் கிரீச்சென சத்தம் எழுந்ததம் விறுட்டென கட்டிலிலிருந்து எழுந்தான் முத்தமிழன்.
"அட ஒக்காருப்பா... எத்தன வருசத்து கட்டுலு இது. அப்பப்ப கயிறு மட்டும் மாத்துவேன். எங்க அப்பன சுமந்து என்ன சுமந்து, இப்ப என் மொவ தூங்குது இதுல..." என்றவர் மேற்கொண்டு விவரத்தை முத்தமிழனிடம் எதிர்பார்த்து அமைதியானார்.
"பல்வாய்கண்டத்துலேர்ந்து வரேன். ஊர்ல வெட்டுக் குத்து ஆகிப்போச்சு... எங்க ஊர்ல கச்சில இருக்க ஆனந்து அண்ணந்தான் ஒங்கள பாக்க சொல்லுச்சு..." என்றான்.
"நாலு நாளக்கி முன்ன டவுன்ல கூட்டத்துக்கு போயிருந்தப்ப சொன்னாப்ல வெவரத்த. இன்னதுதான் காரணம்னு சொல்லல. இப்படி ஆயிப்போச்சு ஊரே ரெண்டுபட்டிருக்கு. போலீசு குவிஞ்சிருக்குன்னாரு... அது நடந்தன்ன மக்யாநாளு பேப்பர்ல பாத்தேன், அது இதான்னு தெரியாது. இம்மோம் பெருசாவும்னு தெரியாது." என்றவர், "யம்மோவ்... சின்னபுள்ள..." என மகளை அழைத்தார்.
கையில் காய்ந்திருந்த கழனி நீரை கழுவிவிட்டு புடவையில் துடைத்துக்கொண்டே வெளியே வந்தாள். அவளைப் பார்த்ததும் அதிர்ந்த முத்தமிழன், நல்லுசாமியை பார்த்துக்கொண்டே அவளையும் பார்க்கிறான்.
"குடிக்க நீராரம் கொண்டா..."
முத்தமிழனை முறைத்துக்கொண்டே சென்றாள்.
"தம்பி... டவுனுக்கு போனாதான் நெலவரம் என்னான்னு தெரியும். அங்க போயி வக்கிலு கிக்கீலு பாத்தாதான் வெவரம் புரியும். ஏதாவது ஆகாரம் போட்டீங்களா வவுத்துக்கு... யம்மோவ் தம்பிக்கும் சேத்து நீராரங் கொண்டா..." என்றார்.
முத்தமிழன் பேசாமலேயே அமர்ந்திருந்தான்.
"தம்பி ஒங்களதான்... ஆகாரம் ஏதாச்சும் போட்டீங்களா..."
"இல்லீங்கய்யா... டீ குடிச்சேன்"
இரண்டு சொம்பில் நீராரத்தைக் கொண்டு வந்தாள் இளங்கன்னி.
"மதியழகி... மதியழகி..." என வீட்டுக்குள்ளிருந்து ஒரு குரல்.
"ஒம்மா கூப்புடுது... என்னான்னு போயி பாரும்மா..." என்றார் நல்லுசாமி.
வாழையிலையில் எதையோ எடுத்து வந்தவள், "மல்லட்ட தொவையல்" என கட்டில் காலின் மீது வைத்தாள்.
நீராகாரத்தில் கிடந்த பருக்கைகளை மென்றுகொண்டே தொவையலை ஆட்காட்டி விரலால் தொட்டு நாக்கில் வைத்தவனை, தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் மதியழகி.
“இங்கயே ஒக்காந்திருங்க. இந்த கொளத்துல வுழுந்து எழுந்துருச்சி வரேன்...” எனக் கிளம்பினார் நல்லுசாமி.
வீட்டு வாசலில் இருந்த எலுமிச்சை மரத்தடியில் சீய்த்து சீய்த்து புழுக்களைக் கொத்தும் சேவலையுங் கோழியையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான். நீராகாரம் கொடுத்த சொம்பை எடுக்க வந்தவள், “தொவையலு நல்லாருக்க...” என்றாள்.
பேசுவதறியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். உள்ளிருந்து ‘மதியழகி’ என மீண்டும் அழைப்பு வந்தது.
ஈர வேட்டியை தோளில் போட்டும் துண்டை இடுப்பிலும் கட்டிக்கொண்டு வந்தார் நல்லுசாமி. எங்கோ வெறித்துப் பார்த்தபடியிருந்த முத்தமிழனிடம், “என்ன தம்பி போவுலாமா...” என்றார்.
முத்தமிழன் தயங்கிக் கொண்டே பேச முற்படுவதை உணர்ந்து, “என்னய்யா...” என்றார்.
“என்னையும் போலீசு தேடுதுங்க... நான் டவுனுக்கு எப்படி வர்றது...”
“ஒன்னைய ஏந் தேடுது”
“அந்தாள வெட்டுன நாலு பேருல நானும் ஒருத்தன்” என்றான்.
நல்லுசாமி முகம் மாறியது. சத்தமாக மகளை அழைத்தார்.
தெவசம் - 5
கருத்துகள்
கருத்துரையிடுக