பத்தாயம்

ஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக ஹரித்துவாரமங்கலம் சென்று, அங்கிருந்து மாற்றுப் பேருந்து ஏறினால் 'மருவத்தூர்' எனும் குக்கிராமம். அங்குதான் வேலை. பன்னெடுங்கால சிவன் கோயிலை மீட்டுக் கட்டியெழுப்ப வேண்டும். தாய் மாமனுக்கு முதல் காண்ட்ராக்ட் வேலை. பனிரெண்டாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறை என்பதால் நானும் வேலைக்குச் சென்றிருந்தேன். அர்த்த மண்டபம், மஹா மண்டபம், கர்ப்பக் கிரகம் என இருந்த பழைய பாழடைந்த கருங்கற் கோயிலை அப்படியே பிரித்து அப்படியே கோர்க்க வேண்டும். விறுவிறுப்பாக வேலைகள் நடக்கும். ஆளாளுக்கு பாடல்கள் போட வாய்ப்புண்டு. நான் அப்போது சாம்சங் பட்டன் போன் வைத்திருந்தேன். ஒரு ஜி.பி. மெமரி கார்டு முழுக்க மதுரை சந்திரன் பாடல்கள்தான்.

'உன்னை பெத்த தோசத்துக்கு ஒரு மண்ணை பெத்தாலும் வாழ்ந்திருப்பேன். கண்ணை வித்து சித்திரம் வாங்கிய கதையா போச்சு... எலே கடன்காரனே தொலஞ்சி போன்னு கட்சி மாறியாச்சு, பெத்தவளும் கட்சி மாறியாச்சு'

'இலங்கையைக் குரங்கு எரித்தது அன்று. இலக்கியம் கூறும் சரித்திரம் உண்டு.'

'நாத்துனா மகனுக்கு என் பொண்ணக் கொடுத்து...'

'மாடு மேய்க்க நான் அனுப்ப மாட்டேனடா...' என எக்கச்சக்கமான பாடல்கள் எனக்கு உத்வேகத்தைத் தந்தன. பாடலின் லயிப்பில் பெரிய பெரிய கருங்கற்களைச் சுமந்து வருவேன். 

இரவானால், பூமிநாதன் மாமாவின் பாட்டுகளும், கிட்டி அண்ணனின் சமையலும் என நாட்கள் கழிந்தன. கத்தரிக்காய், முருங்கைக்காய் சகிதம் கொண்டைக்கடலையும் போட்டு அவர் செய்யும் குழம்பு அத்தனை ருசியாக இருக்கும். கரகரப்பான குரல்காரர். ஆரம்பத்தில் கல் வேலைகள் செய்தவரை, அவர் எல்லோரிடமும் செய்யும் பகடிக்காகவே அவரிடம் பெரிய வேலைகளை வாங்காமல் தவிர்த்து பின்னாளில் சமையல் மாஸ்டராக ஆனார். வேலை, குடி என நாடோடியாக வாழ்ந்தவர். 

நாங்கள் வேலை பார்த்தது முக்குலத்தோர் வசிக்கும் பகுதியில் இருந்த கோயில். எந்த ஊருக்கு வேலைக்குச் சென்றாலும், ஏதாவது ஒரு இடைநிலை சாதியைச் சொல்லித்தான் செய்வோம். அந்த ஊரிலும் அப்படியே. 

சனி, ஞாயிறுகளில் வயலுக்கு மாட்டை ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு வீடு திரும்பும் மணிமேகலை, நாங்கள் வேலை பார்க்கும் கோயில் வழியாகத்தான் வீட்டுக்குச் செல்வார். அவ்வப்போது என்னைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக இருந்தவர் காதலிப்பதாகவும் சொன்னது எனக்குப் பேரதிர்ச்சிதான். உடன் வேலை பார்ப்பவர்களுக்குத் தெரிந்தாலும் அடிப்பார்கள். ஊரில் இருப்பவர்களுக்குத் தெரிந்தாலும் அடிப்பார்கள். அப்படியே ஆனது. முக்குலத்துச் சண்டியர் ஒருவருக்குத் தெரியவர, என்னைக் கூப்பிட்டு மிரட்டியது, எங்கள் குழுவுக்கும் தெரிந்துவிட்டது. அந்த பயத்தில் இரவோடு இரவாக எங்கேயோ ஓடிவிட்ட கிட்டி அண்ணனை அதன்பிறகு நான் பார்க்கவில்லை. எங்கு இருக்கிறார் என்பது குறித்தும் அறியவில்லை.

இன்று காலை ஊரில் தங்கச்சியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, "தம்பி வெடிச் சத்தத்துக்கு பயப்படுகிறான்" என்றார். "எங்க வெடிக்கிறாங்க" எனக் கேட்டேன்.

யாரோ கிட்டியாம் அவர் செத்துட்டாரு. அதான் வெடி வெடிக்கிறாங்க என்றார். 

நல்லவெட்டியான் மொவனா என்றேன். தெரியவில்லை என்றார். வெள்ளச்சி மகனா என்றேன். தெரியவில்லை என்றார். வீரமணி அண்ணனா என்றேன். ஆம் என்றார்.

அவரேதான். மருவத்தூர் மணிமேகலை மேட்டரில் பயந்து எங்கேயோ போனவர், பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊர் ஊராகத் திரிந்து விபத்தில் அடிப்பட்டு ஊர் வந்தவர் இறந்து போயிருக்கிறார்.

இவர்கள் குறித்தெல்லாம் எழுதும் உத்வேகத்தை 'tamil wikki' தந்துள்ளது. இனவாதத்துக்கு எதிரான மனநிலையில் இன்றும் இருக்கிறேன். ஆனாலும் தமிழ்ச் சமூகத்தில் புரையோடிக் கிடக்கிற சாதியத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் இடதுசாரியாகவே அறிய விரும்புகிறேன்.

அன்பும் நன்றியும் ❤️



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசம்

இருபத்தியோராம் நூற்றாண்டின்  அழகி.!

தலைக் கவிழ்ந்த சிங்கம்