பாட்டு



"நம்ம திட்டமிடாத ஒரு பொழுதில் நம் வாழ்க்கைக்குள்ள ஒரு பாடல் வருது அதனாலதான் அது ஸ்பெஷலா இருக்கு".

கவிஞர் வெய்யில் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை அப்போதே பார்த்துவிட்டேன். அதே நிகழ்ச்சியில் 'நாதம் என் ஜீவனே' பாடலை ஒரு பெண் பாடியிருப்பார். அதையும் இந்தக் காணொளியையும் அடிக்கடி பார்ப்பேன். குறிப்பாக வெய்யிலின் குரல் அவர் கவிதையைப் போன்றே எனக்குப் பிடித்திருந்தது ஒரு காரணம். சமீபத்தில் கூட அவரின் முகநூல் பக்கத்தில் 'ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது' பாடலை பதிந்திருந்தார். அதை எனது நண்பருக்கு அனுப்பியிருந்தேன். "வாவ்...வெய்யில் கவிதைகள் ரொம்ப பிடிக்கும் அவர் பாடுவார்னு இப்பதான் தெரியும்"னு அனுப்பியிருந்தார். 

இந்தப் பதிவு வெய்யிலுக்கானதல்ல., வெய்யிலாலானது.

இப்பல்லாம் பேசுறதுக்கும் எழுதுறதுக்குமே ஒரு தயக்கம் இருக்கு...'பூமர் அங்க்கிள்'னு கமெண்ட் பண்ணிடுவாங்களோன்னு...

மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது எங்கோ ஒலிக்கிற பாடல் காற்றில் மிதந்து காதில் கேட்கும் என சொல்லியிருப்பார் வெய்யில். அந்த உண்மைக்காகத்தான் இதை எழுதணும்னு நினைக்கிறேன். முதல் டி.வி, முதல் சைக்கிள், முதல் ஃபோன் என இதற்கு முன்பு எழுதியிருக்கிறேன். மீண்டும் எழுத சலிப்பாகத்தான் இருக்கிறது. இருப்பின் இப்போதுதான் 'உருட்டு' என்கிற ஒரு சொல் இருக்கே!? அதனால்... வேறு மாதிரி முயல்வோம்.

முதன் முதலாக பாடல்கள் கேட்கத் தொடங்கியது அரசுத் தொலைக்காட்சியில்தான்....
ஊருக்கு ஊர் டி.வி ரூம் என்கிற ஒன்றை நிறுவி அரசே தொலைக்காட்சிப் பெட்டி வைத்து பராமரிக்கவும் ஆள் போட்டிருந்தார்கள். 'ஒலியும் ஒளியும்' தான் பாடல்களை காட்சியாக பார்க்கிற வாய்ப்பைத் தந்தது.

டி.வி யை பார்த்துக் கொள்கிற பொறுப்பாளர் வீட்டுப் பையன் குச்சியால் என் கண் ஓரத்தில் குத்தியதால் பெரிய சண்டையாகி அங்கு போவது தடையானது. பின்னாளில் டிவியும் வீணாகி சரி செய்யாமல் கிடந்தது. டி வி ரூமும் ஆடு கட்டப் பயன்பட்டது.

நாளுங்கிழமையென்றால் சலுப்பையிலிருக்கும் விஜி அக்கா வீட்டுக்கு வருச (சீர்) எடுத்துப் போக அம்மா மினி பஸ்ஸில் அழைத்துச் செல்வார்.பேருந்தில் நிறைய பாடல்கள் ஓடும் ஆனால் நினைவிலில்லை. நன்றாக நினைவு தெரிந்து பாடல்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்கிற வயதில்தான் ஆயா குலுக்கல் சீட்டில் கை ரேடியோ வென்றிருந்தார். அது எஃப் எம் மட்டுமே ஓடக்கூடிய ரேடியோ. துருத்திக் கொண்டிருக்கும் சில்வர் கம்பியில், அப்பா கேரளத்திலிருந்து எடுத்து வந்த டெலிபோன் ஒயரின் ஒரு நுனியை சுற்றி, 20 அடி உயர நீள் கழியில் இய்யத் தட்டு ஒன்றைக் கட்டி குறிப்பாக சோறு வடிக்கிற தட்டு., அந்த ஓட்டையினுள் ஒயரின் மறு முனையைப் பிணைத்து ரேடியோவுக்கு சிக்னல் கொடுப்போம். எங்களூரில் ஓடுகிற ஒரே பண்பலை காரைக்கால் 100.3 மட்டும்தான்.

அந்த ரேடியோவில் கேட்டப் பாடல்கள்தான் இன்றும் நினைவிலிருப்பவை.அவர்களாக ஒலிபரப்பும் பாடல்களை விட நேயர் விருப்பமாக நம் அருகிலுள்ள ஊரிலிருந்தெல்லாம் பாடல்கள் கேட்டு கடிதம் எழுதியிருப்பார்கள்.அந்தப் பாடல்கள் இன்னும் நெருக்கமாக இருக்கும். கீழமணக்குடியிலிருந்து சக்தி அக்கா நிறைய நல்ல பாடல்களைக் கேட்டிருப்பார்.(சக்தி பெண் என்பதை அறிந்த கதை ஒன்று உண்டு கடைசியில் குறிப்பிடுகிறேன்).

முள்ளும் மலரும் படத்திலிருந்து கே.ஜே. ஜேசுதாஸ் பாடிய பாடல் இதோ என்கிறபோது என்ன பாடலாக இருக்கும் எனக் காத்திருந்த நேரத்தில்... என்னடா இவ்ளோ நேரம் மீசிக்கே ஓடுதுன்னு கடுப்பாகியிருக்கிறேன். ஏனெனில் பாடல்களில் குரலைக் கேட்பதில்தான் அதிகமாக கவனம் செலுத்தியிருக்கிறேன். அது மட்டும்தான் எனக்கு பிடித்ததாகவும் இருந்திருக்கிறது. அதனால்தான் இரைச்சல்கள் எனக்கு ஒவ்வாமையாக இருக்கின்றன.

'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' பாடலை முதன் முதலாகக் கேட்டது அப்போதுதான். முதலில் கேட்டதுமே மீண்டும் கேட்கத் தூண்டியது. சக்தி அக்காவைப் போல் வேறு யாராவது அதே பாடலைக் கேட்பார்களா என ஏங்கிய நாட்களதிகம்.

*காட்டுக்குயில் பாட்டுச் சொல்ல...
*வண்ண நிலவே வைகை நதியே...
*காதோரம் லோலாக்கு...
*பொன் வானம் பன்னீர் தூவுது...
*வைகைக் கரை காத்தே நில்லு...
*வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது...
*நாதம் என் ஜீவனே...
*தூரத்தில் நான் கண்ட உன் முகம்...
*விழியில் விழுந்து இதயம் நுழைந்து...
*இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது...
*எடுத்து வச்சப் பாலும் விரிச்சு வச்ச பாயும்...

ஆயாவுக்கு பரிசில் விழுந்த கை ரேடியோவில் கேட்டு இன்றளவும் கேட்கும் பாடல்களின் பட்டியல் நீளும்...

"செல்லுக்கட்ட(பேட்டரி) உப்பிருச்சு...புதுசு வாங்கிட்டு வரேன்னா ஓத்தா... அதுவரிக்கும் அத போடாத... எத்தன நாளக்கி வெயில்ல வச்சி வச்சி அந்தக் கட்டய போடுறது... தொடச்சி வை"யுன்னு ஆயா சொல்லவும்...

பழந் துணியொன்றில் தேய்காய் எண்ணெயைத் தொட்டுத் துடைத்து., எலக்ட்ரீசியன் கோனாட்டு மாமாவிடம் திருப்புளி வாங்கி வந்து திறந்து உள் பக்கமும் எண்ணெய் விட்டுத் துடைத்தேன். வேலை முடிந்து வரும்போது அம்மா பெரிய எவரடி பேட்டரி வாங்கி வந்திருந்தார். அந்த கணம் உண்டான உணர்வை எப்படி எழுதுவது. யாரேனும் நண்பர்கள் படத்தில் இப்படி ஒரு காட்சி வைத்தால் நிச்சயம் என்னால் அதை அப்படியே நடித்துக் காட்ட முடியும்.

புது பேட்டரியைப் போட்டு ஆன் செய்தால் கொர்.... எனச் சத்தம். மற்றெந்த நிகழ்ச்சியின் சத்தமும் கேட்கவில்லை. வெளியே சென்று ஆன்டனாவைத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு., கோனாட்டு மாமாவிடம் ரேடியோவை கொடுக்கச் சொன்னார் அம்மா...

" என்ன மாப்ள பள பளன்னு இருக்கு ரேடியா"...

"நாந்தான் மாமா எண்ண போட்டு தொடச்சேன்"

அருகில் அழைத்து என் மண்டையைப் பிடித்து சுற்றி சுற்றிப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

"எங்கயாச்சும் ஓடி வெளாடும்போது மூள நழுவி கிழுவி வுழுந்துடப் போவுது மாப்ள... ஒக்காள ஓழி எவன்டா ஒன்ன தேங்காண்ண போட்டுத் தொடைக்கச் சொன்னது"

அதோடு அந்த ரேடியோவுக்குக் கதை முடிந்தது.

பின்பு காளி அண்ணன் வீட்டிற்கு டேப் ரெக்கார்டர் வந்தது. ஒரு தெருவுக்கே கேட்பதுபோல் சத்தம் வைத்துப் பாடல்களைப் போடுவார்.

காலையில் அவர் போடுகிற முதல் பாடலாக உதிரிப் பூக்கள் படத்தின் டைட்டில் சாங் இருக்கும்...

ஹே... இந்த பூங்காத்து தாலாட்ட
சின்ன பூவோட நீராட்ட
ராகம் இழுக்கும் காத்து
ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து
ரசிச்சு பாடுது பாட்டு...

அவரில்லாத நாட்களில் அவரின் தம்பி பாடல் போட ஆரம்பித்தால்...

கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்கும்
ஒரு இதயம் இல்ல...என்கிற பாடலோடு அந்தக் காலையைத் தொடக்கி வைப்பார்.

அவர்கள் சத்தம் கூட்டி வைத்துப் பாடல் போடுவதால் ஊரில் அடிதடி சண்டை வரை நடந்திருக்கிறது.

சர்க்கஸ் போட வந்தவர்கள் அறிமுகப்படுத்திய 'தமிழ்நாட்டு தாய்க்குலமே அடியேனை மன்னிக்கணும் முடியாட்டி தண்டிக்கனும்' பாடலால் ஊரே பரபரத்துக் கிடந்தது. அந்தப் பாடலை அவர்களே பதிவு செய்து தர பத்து ரூபாய் பெற்றுக்கொண்டார்கள்.

சர்க்கஸ் முடிந்து அவர்கள் சென்ற பிறகு அந்தப் பாடலைக் கேட்க காளி அண்ணன் வீட்டு வாசலே கெதியெனக் கிடந்தவர்களில் இளவரசு மாமா,சிவகுமார் அண்ணன்,கலியமூர்த்தி மாமா,நமச்சி அண்ணன் என பெரிய பட்டியல் அது.

காணும் பொங்கலன்று அந்தப் பாடலை ஒலிக்கவிட்ட எலக்ட்ரீசியன் கோனாட்டு மாமா...அவரே மேடையேறுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. காலி பாட்டில் ஒன்றில் தண்ணீரை நிரப்பி பாடலுக்கேற்றவாறு நடிக்கத் தொடங்கிவிட்டார்.

தலையில் புடவையால் முக்காடு போட்டு கூட்டத்தோடு கூட்டமாக கணவரோடு நின்றிருந்தார் ரேவதி அக்கா.

சத்யா அக்கா திருமணத்திற்கு இரவு பெண்ணழைப்புக்கு வந்திருந்த மேளக்கார செட்டு ரொம்ப பேமசு என பேசிக்கொண்டிருந்தார்கள்.

பரிசம் போடும்போது சில பாடல்களை வாசித்த நாதஸ்வரக்காரருக்கு சத்தியமூர்த்தி தாத்தா பணத்தைப் பாக்பெட்டில் ஊக்கால் குத்திவிட்டபோது எனக்குப் புரியவில்லை.

பெண்ணழைப்பு தொடங்கி கோயிலுக்கு சூடம் கொளுத்திவிட்டு வேனில் ஏறப்போகிற நேரமது...

"ஓராண்டு போன பின்பு 
உன் பிள்ளை ஓடி வந்து
தாய் மாமன் தோளில் நின்று 
பொன்னூஞ்சல் ஆடுமங்கே" என நாதஸ்வரக்காரர் வாசித்ததுதான் தாமதம்...சத்யா அக்காவின் மூத்த அண்ணன் உடைந்து அழுது., கட்டியணைத்து வழியனுப்பினார்.

"எதுக்குமே அசங்காத இந்தப் பய அவந் தங்கச்சி போறான்னு அழுவுறாம் பாரு" ன்னு சாந்தி பெரிம்மா சொல்லும்போது...நாதஸ்வரக்காரரை பார்க்காமல் என்னால் அந்தக் கணத்தைக் கடக்க முடியவில்லை.

எழுதிக் கொண்டிருக்கும்போதே நண்பர் அழைத்து "வேலை ஏதுமிருக்கா" என்றார். இல்லை என்றதும் 'வராஹன்' காத்துள்ளான் வாங்க என்றார். மற்றொரு நாளில் எழுதுவோமென முடித்துக் கொள்கிறேன்.

சக்தி அக்கா பற்றி மேலே சொல்லியிருந்தேன். 

கிறிஸ்துமஸ் சமயத்தில் சர்ச்சில் நடனமாட (😀) சிறப்பு அழைப்பாளராக செல்கிற வழக்கமுண்டு. மிகக் குறிப்பாக எல்லா வருடமும் 'கிறிஸ்தவன டிஸ்டர்ப் பண்ணாத அவன அசால்ட்டாக எண்ணி விடாதே' பாடலுக்குத்தான் ஆடுவோம்.

குங்கும கலரில் சுடிதாரணிந்த அக்கா...எனை அழைத்து நல்லா ஆடுற தங்கபுள்ள எந்த ஊருன்னு கேட்டாங்க...கங்கைகொண்டசோழபுரம் என்றதும்...ஐயோ அந்த ஊரா...சரி சர்ச்சில ஜெபம்லாம் முடிச்சிட்டு உங்க ஊரு கோயிலுக்கு போவோம்னு சொன்னாங்க...சர்ச்சிலிருந்து 2 கி.மீ நடந்தும் ஓடியும் வரும்போது பெயரை சொன்னார். ஊர் பந்தநல்லூர் பக்கம்னாங்க...அப்புறம் கீழமணக்குடியின்னாங்க...காரைக்கால் எஃப் எம்ல ன்னு இழுத்தேன்... அடி என் தங்கபொட்டு அது நாந்தான் என்றார் கீழமணக்குடி சக்தி அக்கா.

மீண்டும் நண்பர் அழைத்தார் வரீங்களா என உறுதி செய்ய என்றார்.

நான் யூ டியூபினுள் நுழைந்து...

ஏழமக வீட்டுக்குள்ள
எளம்பொறையா வந்தவனே 
வாழையடி வாழையன
வளர்ந்து வரும் சந்திரனே
பால்வடியும் பூ முகத்தில்
நீர் வடியக்கூடாதா
பாத்துப்புட்டா பாத்துப்புட்டா
பெத்தமனம் தாங்காது
கண்மணியே கண்மணியே
கண் உறங்கு... கண் உறங்கு...

என ஒலிக்கவிட்டு கிளம்ப ஆரம்பித்தேன்.

"நம்ம திட்டமிடாத ஒரு பொழுதில் நம் வாழ்க்கைக்குள்ள ஒரு பாடல் வருது. அதனாலதான் அது ஸ்பெஷலா இருக்கு".

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசம்

இருபத்தியோராம் நூற்றாண்டின்  அழகி.!

தலைக் கவிழ்ந்த சிங்கம்