நண்பனைக் காணவில்லை
“அன்பு கழுதையே… என் நண்பனைப் பார்த்தாயா?”
“காக்கையே… உன் நண்பன் யார்? உன் நண்பன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? நான் தெரிந்து வைத்திருக்க” என்றது கழுதை.
“மன்னிக்கவும் அன்பு கழுதையே… என் நண்பன் எருமை. அவன் குளத்தில் விளையாடும்போது, அவன் மேல் அமர்ந்து நானும் விளையாடுவேன்.” என்றது காகம்.
கழுதை சத்தமாகச் சிரித்துவிட்டு, “நீயும் எருமையும் நல்ல பொருத்தமான நண்பர்கள்.” என்றது.
காகம் அங்கிருந்து சோகமாகப் பறந்தது. பல இடங்களில் தன் எருமை நண்பனைத் தேடி அலைந்தது. அப்போது காகத்துக்கு ஒரு யோசனை வந்தது. தன் நண்பன் எருமைக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். சத்தமாக ஏதாவது இசையை ஒலிக்கவிட்டால், எருமை எங்கிருந்தாலும் வந்துவிடும் என நினைத்தது.
“அன்புள்ள மயிலே… என் நண்பனைக் காணவில்லை. நீ அகவும் சத்தம் இனிமையாக இருக்கும். நீ கொஞ்ச நேரம் அகவினால் என் நண்பன் கிடைக்க உதவியாக இருக்கும். குயிலையும் அழைத்து வருகிறேன்.” என்றது காகம்.
சிறிது நேரத்தில் குயிலும் வந்தது. மயில் அவகத் தொடங்கியது. குயில் கூவத் தொடங்கியது. சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள குளத்தில் மூழ்கியிருந்தது எருமை. குயில் கூவும் மயில் அகவும் இனிமையான இசை கேட்டு கரை மேலே வந்தது எருமை. அந்த இடம் நோக்கி நடக்கத் தொடங்கியது.
வரும் வழியில், கழுதை ஒரு பள்ளத்தில் விழுந்து மேலே வர முடியாமல் கத்திக் கொண்டிருந்தது. சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த எருமை, கழுதை மேலே வர உதவியது.
“எருமை நண்பா… என்னை மன்னித்துவிடு. என்னையும் உன் நண்பனாக ஏற்றுக்கொள். உன்னைத் தேடி காகம் பல இடங்களில் அலைகிறது.” என்றது கழுதை.
எருமை காகத்தைப் பார்த்தது. குயிலுக்கும் மயிலுக்கும் நன்றி சொல்லிவிட்டு, காகம் தன் எருமை நண்பன் மேல் அமர்ந்தது. நடந்தவற்றைக் காகத்திடம் சொல்லி மன்னிப்பு கேட்டது கழுதை.
கருத்துகள்
கருத்துரையிடுக