காட்டின் தலைவர்!

அழகான அந்தக் காட்டில், விலங்குகளும் பறவைகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. ஒருமுறை, வேறு காட்டிலிருந்து நிறைய நரிகள் கூட்டமாக அங்கு வந்தன.

“வணக்கம் நண்பர்களே…! நாங்கள் வழி தெரியாமல் உங்கள் காட்டிற்கு வந்துவிட்டோம். உங்கள் காடு மிகவும் செழிப்பாக உள்ளது. எங்களுக்கு உங்கள் காடு பிடித்திருக்கிறது. நாங்கள் இங்கு தங்க இடம் தந்தால், எங்கள் காட்டில் கற்ற வித்தைகளை உங்களுக்குக் கற்றுத் தருவோம்.” என்றன நரிகள்.

நரிகள் இனிமையாகப் பேசுவதைக் கேட்ட மான்கள், “நீங்க இங்க தங்குறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அப்படி என்ன எங்களுக்கு கற்றுத் தரப் போறீங்க.” என்றன.

நரிக் கூட்டத்தின் மூத்த நரி, “அதோ அந்த நாவல் மரத்தைப் பாருங்கள். அதிலிருந்து முந்திரிப் பழங்கள் விழும்” என்றது.

எல்லா விலங்குகளும் பறவைகளும் மரத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தன. நரி ஒன்று கீழே நிறைய முந்திரிப் பழங்களைப் போட்டது. எல்லோரையும் கீழே பார்க்கச் சொன்னது.

“ஓ… என்ன ஆச்சரியம். ஐ… ஜாலி… ஜாலி…” என முந்திரிப் பழங்களைப் பார்த்துத் துள்ளிக் குதித்தன பன்றிகள். 

நாவல் மரத்திலிருந்த ஒரு காகம் பறந்து கீழே வந்தது. காகத்தைப் பார்த்ததும் நரிக் கூட்டத்திற்கு பயம் வந்துவிட்டது. நாம் ஏமாற்றியதை காகம் பார்த்திருந்தால், எல்லோரிடமும் சொல்லிவிடுமே என நரிகள் பயந்தன.

“என்ன காக்கையாரே…! மரத்தில் இருந்துதான் வரீங்களா?” என்றது கரடி.

“ஆம், கீழே நடந்த எல்லாத்தையும் பாத்துட்டுதான் வரேன்.” என்றது காகம்.

“ஓ… பார்த்தாயா? நரிகள் எப்படி முந்திரிப் பழங்களை வரச் செய்தன என்பதைப் பார்த்தாயா?” என்றது முள்ளம்பன்றி.

“ஓ… ரொம்ப நல்லா பாத்தேன். நீங்க நம்பி ஏமாந்ததை, நரிகள் உங்களைத் தந்திரமாக ஏமாற்றியதை நன்றாகப் பார்த்தேன்.” என்று காகம் சொன்னதும் எல்லோருக்கும் குழப்பமாக இருந்தது. நரிக் கூட்டம் கலையத் தொடங்கியது. நரிகள் கலைவதைக் கண்ட யானைகள், காகம் சொன்னதில் உண்மை இருக்கும் என்று நம்பின. எல்லா நரிகளையும் சுற்றி வளைத்தது யானை. காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையும் பறவைகளையும் சத்தம் போட்டு அழைத்தது மான். 

“எங்களை மன்னித்து விடுங்கள். சூழ்ச்சி செய்து உங்கள் காட்டை நாங்கள் ஆள நினைத்தோம்.” என்றன நரிகள்.

‘காட்டின் தலைவர் காகம்’ எனப் பட்டம் சூட்டி எல்லா விலங்குகளும் பறவைகளும் காகத்தைக் கொண்டாடி மகிழ்ந்தன. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசம்

இருபத்தியோராம் நூற்றாண்டின்  அழகி.!

தலைக் கவிழ்ந்த சிங்கம்