தெவசம் - 1
கிழக்கே சிங்காரு வீட்டிலிருந்து ஒலிக்கும் தமுரு சத்தத்தோடு அவுரவத்தம்மாளின் கொடி முருங்கை மேலிருந்து சேவலும் கூவுவது விடியலுக்கான அரவங்களாக அன்றாடம் நிகழ்வது போன்ற உடல் பாவனையோடு புரண்டு படுத்தாள் சிவப்பாக்கியம். ஆங்காங்கு சேவல் கூவுவதும் நாய்கள் குரைப்பதுமாக இருந்தபடியால் முனகிக் கொண்டே எழுந்தாள்.
"செத்த நாழிதான் ஆவுது கண்ணசந்து அதுக்குள்ள விடிஞ்சிருச்சி... என்ன மட்டும் என்ன கல்லயா ஒழ்த்து பெத்தாங்க... நல்லா என் நெளுவ ஆராஞ்சிக்கிட்டுதான் எழுந்திருப்பனான்னு படுத்து கெடக்குறா குச்சிகரி மொவ" என மேற்கே செல்லாத்தா வீட்டுக்கு சாணமெடுக்க நடந்தாள்.
வழி கூட்டி வைக்குமிடத்தின் அருகில் புளியமரத்தடியில், நாளைக்கு ஒரு நாள் விட்டால் அதுவே செத்துப்போகும் நிலையிலிருந்த மாடொன்றை கறி போடத் தயாராக கட்டி வைத்திருந்தனர் பூராயிரும் சேங்கணத்தாரும். பாரையும் சுத்தியலுமாக கறி போடும் இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான் கணேசன்.
"சின்னவன... எலும்பு கறியா ஒரு கிலோ எடுத்து வையி... பயல அனுப்புறேன்" என சாணமெடுக்கச் சென்ற சிவப்பாக்கியம் கணேசனிடம் சொல்லிவிட்டு சாணத்தோடு திரும்பினாள். பெரிய கோனாரும் அவரின் மனைவியும் துணிப்பையும் அலக்குமாக வடக்குவெளி முந்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
"பெரிய தம்பு... கொட்ட திருவ ஆளு வேணுமா... பயல அனுப்புட்டா..." எனக் கேட்டாள்.
"ஆமாம் எம்மாங் காக்கிது... அதுல ஆளு வேற போடுறாங்க... அனுப்பு பழங் குடுத்து அனுப்புறேன்... கொட்ட கிட்ட எடுத்துட்டு வந்துடக்கூடாது சொல்லி அனுப்பு..." என்றார் ஆதிசேட கோனார்.
"யாமூட்டு புள்ள அதுமேறிலாம் செய்யாது... செஞ்ச வேலக்கி பழங் குடுத்தாலே தயங்கி தயங்கிதான் வாங்கும்" எனப் பேசிக்கொண்டே வீடு வந்தாள்.
"சாணி கரச்சி போட கூட ரவ தண்ணி புடிச்சி வைக்காம என்ன செஞ்சிருப்பா பொழுதனைக்கும்... இந்நேரத்துல எவ வூட்டுல போயி தண்ணியெடுக்குறது. பாத்துட்டாளுவோன்னா... சங்க சங்கயா கேப்பாளுவோ...." என்றபடி தாழம்பூ வீட்டின் தோட்டத்தில் நின்று வெகு நேரமாய் தாழம்பூ கிழவியை அழைத்தபடி நின்றிருந்தாள்.
"அட்டியா சோனி பொண்டாட்டி... எம்மோந் நேரம் தூங்குவ... இன்னுமா விடில... அந்தாளு வேட்டிக்குள்ள பூந்தின்னா கண்ணு மண்ணு தெரியாமதான் தூங்குவ..." என ஒரு குடம் தண்ணியை அன்னக்கூடையிலிருந்து எடுத்தாள்.
"ஆரது..." எனக் கூப்பிட்டபடி சோனி சிவப்பாக்கியத்தை நோக்கி வந்தார்.
"நாந்தான்... தாழம்பூட்ட சொல்லிட்டன்" என நடந்தவளை நிறுத்துவது போல்...
"வேட்டிக்குள்ள பூர்ற கதைலாம் ஒங்கிட்டதான் வந்து சொல்றாளா அந்த கெழ செறுக்கி..." என சோனி சொல்லவும். சிரித்தபடியே தண்ணீர் குடத்தை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள்.
"சாணி கரைக்கிற சருவத்த எங்கடி போட்ட... இந்த சக்காள்த்தி மொவள வச்சிக்கிட்டு என்னா பண்ணி எழவெடுக்குறது... கட்டிட்டு போறவன் வூட்டுல நல்லா கிழிய கிழிய குடும்பம் நடத்தும்., புள்ளிவோ அங்கங்க எழுந்து என்னா வேல செய்யிதுவோ... இது மெலுக்கா தூங்குது... அப்பன் பெரிய மம்மல ரெட்டியாருதான..." என்று வசவிக்கொண்டே சாணம் கரைக்கும் பாத்திரத்தை தேடி எடுத்தாள்.
இரண்டு கை சாணத்தை சருவத்தில் போட்டு போதுமான நீருற்றிக் கரைத்து வாசல் வந்தவள்.
"தெனமுந்தான் சாணி தெளிக்கிறேன். கூட்டி வாருறன்... இந்த நாக்குபூச்சி எங்கேர்ந்து வந்து நிண்டுதுவோன்னு தெர்ல... ஊரு ஒலக்கத்துல வளக்குற ஆடு,கோழி,நாயி எல்லாத்துக்கும் தங்குவேலு வூட்டு வாசதான் நல்லா தாராளமா இருக்கும். இங்கதான ஏல பொதுவுல கெடக்கு... இவன்னா... இவன் பண்டம்னா நாயிக்கும்தான் நெளுவு புண்டயா போவுது..." என சாணம் தெளித்து முடித்தவள். சிறிது ஈரம் காய்ந்த பிறகு கூட்டலாமென வெற்றிலை போட உட்கார்ந்தாள்.
"இதே வேல புண்டயா ஒனக்கு... காலைல எழுந்தமா சாணிய கரச்சி போட்டமா கூட்டி வாரி கொட்டுணமான்னு இல்லாம... எனுமோ பத்தேறும் பண்ணையுமா இருக்குற மேறி... அதுங்குற இதுங்குற... தொன தொனன்னு... வாயி ஓயாத ஒனக்கு..." என வாய் கொப்பளித்துக் கொண்டே வெளியில் வந்தார் தங்கவேல்.
"இந்த ரவ எடத்துல குடும்பம் நடத்துறதேதான். ஊரு பய செறுக்கிக்கு ஓக்காலிப்பா இருக்கு. பத்தேறும் பண்ணையும் இருந்தா ஊருவாயி மூடுமா... ஒன்னதான் புடிக்க முடியுமா... இதுக்கேதான் அவுருதொட்டியே கெதியா கெடக்குற" என பீட்டன் பாக்கை பாதியாக கடித்து ஒரு பாதியை மென்றுகொண்டே சொன்னாள். பின்பு மைதீன் புகையிலை பாக்கெட்டிலிருந்து ஆட்காட்டி விரலும் கட்டை விரலும் பழகிய போதுமான அளவை எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டி வாயின் இடது ஓரமாய் வைத்து அதக்கி அதக்கி ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து புகையிலை உருண்டையை அதன் வழக்கமான இருப்பிடத்தில் அமர வைத்துவிட்டாள். கூட்டி முடிப்பதற்குள் லேசாக விடிந்தும் விட்டிருந்தது.
நான்கைந்து தருமாஸ்பத்திரி மாத்திரைகளை அம்மியில் வைத்து இடித்துக் கொண்டே, "விடியங்காட்டியும் ஏன் அந்தப் பயல எழுப்புற" எனக் கடிந்து கொண்டார் தங்கவேல்.
"கணேசங்கிட்ட கறி எடுத்து வக்கெ சொன்னேங்... இவம் போயி வாங்கியாந்தா நான் அந்த தோட்டத்த வாரிக் கொட்டுவேன்"
சில்வர் வாளியைக் கழுவி எடுத்து வந்து அரைத் தூக்கத்தில் இருக்கும் பேரன் கையில் கொடுத்து அனுப்பிவிட்டு, தென்னை விளக்குமாற்றோடு தோட்டத்திற்குச் சென்றாள்.
மூத்தவள் நானம்பாளின் மகன் தங்கமணி. கரும்பு வெட்ட போன இடத்தில் பாம்பு கடித்து நானம்பாள் இறந்துவிட, அப்பா கனகராசு வேறு ஒருவரோடு சேர்ந்து வாழ்கிறார். மனமுவந்து மாமியாரிடம் பயலை தூக்கிக் கொடுத்து, "யாங்கிட்டலாம் இவன் வளரமாட்டான். நாந் தேடுனவளும் பாத்துப்பாளான்னு தெரில... நீங்க நல்லபடியா வளத்தெடுப்பீங்க... சம்பார்த்தன இருந்தா ஏதோ கொடுத்து உதவுறேன்" எனச் சென்றவன் பன்னண்டு வயசாகுது பயலுக்கு ஒருமுற கூட எட்டிப் பாக்கல.
"ஒரு ஆம்பள காலம்பறயே எழுந்து ஒக்காந்துட்டு மாத்தரய இடிச்சிட்டு ஒக்காந்துருக்கான். அந்த ரவ பய போயி கறி வாங்கியாந்து... இவனுக்கு ஆக்கிப் போடணும்" என முனகிக்கொண்டே தோட்டத்தை பெருக்கினாள்.
கோட்டுவாயோடு பாவாடையை இறுக்கிக் கட்டிக்கொண்டே எழுந்தாள் சூடாமணி.
சூடாமணிக்கு பதினைந்து வயதிருக்கும். பள்ளிக்கூடம் படிக்கிறாள். எந்நேரமும் அம்மாவின் வசவுகளைப் பெற்றுக்கொண்டு அப்பாவிடம் ராசியாக இருக்கும் அவளுக்கு படிப்பு ஏனாதானோதான்.
"வருது பாரு... கோட்டு வாயோட... ஊர்ல எந்த பய மக்களாவது இப்படி எழுந்து வரும... ஒரு பொட்டபுள்ள எம்மோந் நேரம் தூங்குவ... அப்பந் தெம்புல ஆட்ற நீ..." என பூவரசு, மூங்கில், ஒதியஞ் சருகுகளை கூட்டி ஓரிடத்தில் சேர்த்து எரியூட்டிக் கொண்டே பேசினாள் சிவப்பாக்கியம்.
"ஆயோவ்... கறி வாங்கல்லாம் நீங்க யாராச்சும் போங்க... மொத யாவாரம் போறதுக்குள்ள வாளி தூக்கிட்டு வந்துட்டியேன்னு கேக்குறாரு சேங்கணத்தாரு தாத்தா..." கறி வாங்கி வந்த வாளியை பொத்தென வைத்துவிட்டுக் கோபத்தோடு சென்றான்.
"அந்தாளுக்கு வேற வேல மயிரு இல்ல... என்னா யாசகமாவா தரானுவோ... பொழுதுக்குள்ள தூக்கி வுட்டு கெடாச போறோம் அந்த காச..." மிச்ச சருகுகளை மகளை எரிக்கச் சொல்லிவிட்டு கறியை அலசத் தயாரானாள்.
"சூடாம்ணி... சூடாம்ணி..." எனக் கூப்பிட்டபடி பின்பக்கத் தோட்டத்திற்கு வந்த தங்கவேல், "கீழ வுழுந்த காயமே இன்னுங் ஆறல... அதுக்குள்ள நெருப்பு கிட்ட யாம் போன" இடித்த தருமாஸ்பத்திரி மாத்திரைகளை தேங்காய் எண்ணெய்யில் குழப்பி சூடாமணியின் கால் காயத்தில் வைத்தார்.
நான்கைந்து முறை கறியை அலசியெடுத்து, அடுப்பில் தீ மூட்டி இய்யச் சருவத்தில் கறியை அள்ளிப் போட்டு கல்லுப்பும் மஞ்சள் தூளும் கலந்து தண்ணியூற்றி மூடினாள் சிவப்பாக்கியம்.
"தண வெளில வராம அடுப்ப தள்ளி வுடு... இந்தக் கடைல போயி வெங்காயந் தக்காளி வாங்கியாறன்..." என மகளிடம் சொல்லிவிட்டு எறவானத்தில் செருகி வைத்திருந்த சுருக்குப் பையை எடுத்துக்கொண்டு சென்றாள்.
'அம்மா நடந்து போய் வருவதற்குள் எப்படியும் நேரமாகும். கொஞ்சம் தாங்கலாக நடப்பதால் அவரை பட்டப் பெயரிட்டே அழைப்பார்கள். நான் பிறப்பதற்கு முன்பே, முந்திரிக் காட்டில் வேலைக்காகச் சென்று கிளை முறிந்து கீழே விழுந்தவர்தான் கால் முறிந்து படுத்த படுக்கையாகி எறவாங்குடி கட்டுப் போட்டு மீண்டு வர பல மாதங்கள் ஆனதாம். எப்போதாவது அப்பா சாராயம் குடித்திருந்தால் என்னிடம் சொல்லிவிட்டு அழும்.' என நினைத்துக்கொண்டே வெந்த கறியை அரிந்து கொண்டிருந்தாள் சூடாமணி. அவித்த கறியின் வாசம் வீடு முழுக்க மணக்க... வாசலில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த தங்கமணி வீட்டுக்குள் ஓடி சூடாமணி அரிந்து கொண்டிருக்கையிலேயே எலும்போடு ஒட்டியிருந்த கறியை எடுத்து கடித்து இழுத்தான்.
"அப்படியே அப்பனாட்டம் வெவுச்ச கறி திங்கிது பாரு... ஆக்குறதுக்குள்ள அப்படி என்ன அங்கால்ப்பு...." என குழம்பு சாமான்களோடு நுழைந்தாள் சிவப்பாக்கியம்.
"அவம் பாட்டுக்கு எதையாவது திங்கிறான் ஒனக்கென்னம்மா... இப்ப ஏன் அவன் அப்பன இழுக்குற..." எனச் சொல்லிக்கொண்டே வெந்த ஈரலை மெல்லத் தொடங்கினாள் சூடாமணி.
மஞ்சள் பை, கிலிக்காட்டி, மண்வெட்டி சகிதம் புறப்படத் தயாரானார் தங்கவேலு.
"நீராரம் இருந்தா கொண்டா... நான் கெழக்க போறேன். வெய்ய தய்ந்துதான் வருவேன்."
"போனமா... நண்டு புடிச்சமான்னு வரணும்... எவனாவது வாங்கித் தரான்னு குடிச்சிட்டு வரக்கூடாது..."
"எவன்டி வாங்கி தரான்... இல்ல இம்மோம் நாளு எவனாவது வாங்கி குடுத்துதான் குடிச்சிட்டு வந்தனா... எளக்காரப் புண்டயாவே பேசு எந்நேரமும். என்னைக்காவது ஒருநாளு நண்ட புட்ற மேறி புட்டு எறிஞ்சிடறேன்..."
தெவசம் - 2
கருத்துகள்
கருத்துரையிடுக