தெவசம் - 2
திடுத்திடுவென தோட்டத்திற்கு ஓடி பூவரசையும் பலாவையும் இணைத்துக் கட்டிய கொடியில் காயப் போட்டிருந்த சட்டைகளில் ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டே...
"தாத்தோவ்... நில்லு நானும் வரேன்..." என்றான் தங்கமணி.
"நீ எங்கடா வர... வெய்ய தாங்கமாட்ட... வூட்லயே சோத்த தின்னுட்டு வெளாண்ட்டு கெட..."
"யாங் இந்த பய வந்தா... மூத்தரம் குடிக்க முடியாதுன்னு வேணாங்குறிய..." என்று முகங் காட்டினாள் சிவப்பாக்கியம்.
"யாங் வாயில எதாவது வந்துட போவுது... நீலாம் பொம்பளயாடி... ஒப்பனா அவுத்து குடுத்தான் குடிச்சிட்டு வர... இல்ல ஒம்மா அவுத்து குடுத்தாளா... பேச்சு மயிரு பேசுற பேச்சு..."
"ந்தாரு... இங்க வச்சிக்கிறதோட நிறுத்திக்கணும். ஆத்தா அப்பன இழுத்தா... நடக்குறதே வேற.... யாங் என் ஆத்தா அப்பன் அவுத்தத வாங்கிட்டு வந்து வக்கனையா திங்கிம்போது தெரிலியே..." எனப் பெருமூச்சு விட்டாள்.
இருவருக்குமான சண்டையைப் பார்த்துக் கொண்டே... மெதுவாக பின் நகர்ந்தான் தங்கமணி.
"இந்த வக்காள ஓழியால வர்றது... இம்மோனும். பள்ளிக்கொடம் போனா என்ன... யாங் நண்டு புடிக்க வரேன். நொண்டு புடிக்க வரேன்னு அலையிற..."
"இன்னக்கி சனிக்கெழம யாரு பள்ளிக்கொடம் வச்சிருக்கா..." என தாத்தனோடு நடக்க ஆரம்பித்தான்.
கூட்ரோட்டு மேட்டிலிருந்து ஓடை வழியாக நடக்க ஆரம்பித்தவர்கள், கீழ சம்போடை கடந்து சுண்டிப்பள்ளம் வழியாக வடவாற்றை அடைந்தனர். முழங்கால் அளவு நீரில் கால்களை நனைத்துவிட்டு மேலேறியவன், ஊமத்தம் பூ ஒன்றைப் பறித்து ஆத்துப் படிக்கட்டில் வைத்துவிட்டு வயலில் இறங்கிய தாத்தனை நோக்கி ஓடினான். கால்களில் நாயுருவி கீறல்களோடு தாத்தனை அடைந்தவன், நத்தையொன்றை அவரது கையில் திணித்தான்.
"இத ஏன்டா...எடுத்தட்டு
வந்த..."
"ஆயாதான் இதை வெவுச்சி தொட்டுக்க செஞ்சி தரும்..."
"நண்டு புடிச்சிட்டு போவும்போது... ஆத்துல நத்த கித்த ஊமச்சி கீமச்சி இருந்தா புடிச்சிட்டு போவுலாம்... இந்த பைய புடி. நான் ஒன்னொன்னா பைல போட்டதும் கெட்டியா புடிச்சிக்க..."
கிலிக்காட்டியை ஆட்டிக்கொண்டே... வாயால் நீர்ச் சத்தமிட்டார். மெது மெதுவாக கொடுக்கை உயர்த்திக் கொண்டே நண்டு வெளியே வந்துகொண்டிருந்தது. கையில் தயாராய் வைத்திருந்த மூங்கில் கொக்கிகளை வளைக்குள் விட்டு நண்டின் பின்பக்கத்திலிருந்து கொக்கியை செலுத்தி வெளியே இழுத்தார். வெளியில் விழுந்த நண்டு, அங்குமிங்கும் ஓட முற்பட்டும் கொடுக்கால் சீறுவதுபோல் உயர்த்தியும் நின்றது.
"வூட்டுக்கு போனதும் மொளவு, சீரகம் தண்ணி தரேன். இப்ப பைக்குள்ள கெட" என லாவகமாகப் பிடித்து பைக்குள் போட்டார். பையின் முனையை இறுகப் பிடித்துக்கொண்ட தங்கமணி...
"தா... ஒரு வள இருக்கு தாத்தா..." என்று பக்கத்திலேயே கை காட்டினான்.
அறுப்பு முடிந்து அடுத்த போகத்திற்கான கால இடைவெளியல் காய்ந்திருந்த வயல் என்பதால் சற்றுக் கடினமான வளைகளாக இருந்தன. அதற்காகத்தான் மண்வெட்டி எடுத்து வந்திருந்தார். ஒரு சாண் அளவுக்கு வளையை வெட்டிய பிறகு, கிலிக்காட்டியை ஆட்டத் தொடங்கினார். தங்கமணி சற்று தூரம் தள்ளி எருக்கஞ் செடியின் பூக்களை அழுத்தி வெடித்துக் கொண்டிருந்தான். உடையார்பாளையம் ஆட்டுச் சந்தையிலிருந்து ஆடு வாங்கியவர்கள் ஆடுகளுக்கு தழைகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே அவ்வப்போது சாலையைக் கடக்கிறார்கள்.
"எலேய்... தங்கமணி..." என உரத்து அழைத்தார் தங்கவேல்.
பையைத் தூக்கிக்கொண்டு ஓடினான். பெரிய கொடுக்குள்ள நண்டொன்றை பையில் போட்டுவிட்டு, "இங்கயே ஒக்காந்திரு... நான் போயி தண்ணி குடிச்சிட்டு வரேன்..." எனக் கிளம்பினார்.
ஆத்தைத் தாண்டி இருக்கிற வீடுகளை நோக்கி தாத்தா போவதைப் பார்த்துவிட்டு பனைமரத்தடியில் அமர்ந்தான். பையை தரையில் வைத்து கையளவு செங்கல்லை பையின் வாய்ப் பகுதியில் வைத்தான். பனைமரத்தின் மேல் ஒவ்வொரு மட்டையாகத் தாவிக்கொண்டிருந்த அணிலை நோக்கிக் கல்லெறிந்தான். மேலே சென்ற கல் மீண்டும் இவனை நோக்கி வருவது கண்டு ஒதுங்கி, கிலிக்காட்டியைக் கையில் எடுத்து காதோரம் வைத்து ஆட்டிப் பார்த்தான். குளத்து நீரில் கை வைத்து வேகமாக அலசும்போது கேட்கிற சத்தத்தை ஒத்திருந்தது. மூங்கில் கொக்கிகளையும் கையில் எடுத்தவன், தாத்தா வருகிறாரா எனப் பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆளைக் காணும். வளை ஒன்றைத் தேடி, கிலிக்காட்டியை ஆட்டத் தொடங்கினான். நீர்ச் சத்தமிட அவனுக்கு வரவில்லை. வளையிலிருந்து தலை நீட்டுவதுபோல் இருந்தது. நண்டு போல் அல்லாமல் வேறு ஏதோ உருவம் போல் இருந்ததால் பயத்தோடு கிலிக்காட்டியை தொடர்ந்து ஆட்டினான். தூரத்தில் தங்கவேல் வந்துகொண்டிருந்தார். கிலிக்காட்டியை ஆட்டிக்கொண்டே வளையினுள் விட்டான். ஒன்றரையடி பாம்பொன்று கிலிக்காட்டியின் ஊமச்சி ஓடுகளுக்குள் சிக்கிக் கொண்டது. சத்தமிட்டுக்கொண்டே தங்கவேலை நோக்கி ஓடினான்.
"யான்டா... என்னடா..." என ஓடி வந்தார்.
ஊமச்சி ஓடுகளுக்குள் சிக்கி நெளிந்து கொண்டிருந்த மஞ்சள் சாரையின் தலையைப் பிடித்து லாவகமாக மீட்டு விட்டெறிந்தார்.
"நாலு நண்டுதான் அம்ட்டுது அதுக்குள்ள கிலிக்காட்டிய காலி பண்ணிட்ட... நத்த கித்த கெடந்தா புடிச்சிட்டு போவுலாம்... கீழண்ட கரையோரமா எறங்கு..."
பாம்பை விட்டெறிந்த இடத்தையே பார்த்தபடி ஆற்றுப் பக்கம் நகர்ந்தான். படியில் இவன் வைத்துவிட்டு வந்த ஊமத்தம் பூவை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான் இவன் வயதொத்த சிறுவன். நான் வைத்துவிட்டுச் சென்றேன் என்பது போல அருகில் சென்றான். அவனது அப்பா கீழே தண்ணீரில் நத்தை பொறுக்கிக் கொண்டிருந்தார். ஊமத்தம் பூவைப் பற்றி எதுவும் கேட்காமல் நகர்ந்து தாத்தாவை நோக்கி ஓடினான்.
"கெழக்க எறங்குடான்னா படித்தொறக்கி ஏன்டா போன..." என தங்கவேல் அதட்டினார்.
"காலைல நான் படியில ஊமத்தம் பூ பறிச்சி வச்சேன். அதை அவன் எடுத்துக்கிட்டான்."
"குறுக்கு ரோட்டு சந்தயில காசு கொடுத்தா வாங்க போற... இந்த வடவாத்தங் கர மேல இல்லாத பூவா.."
"படித்தொறயில ஊமத்தம் பூவ பறிச்சு வச்சிட்டு வந்து திரும்ப பாக்கும்போது இல்லன்னா... அந்த பூவு மேறியே நானும் காணாம போயிடுவனாம்... பள்ளிக்கொடத்துல எங்கூட படிக்கிற பூவதி சொன்னான்.."
"யார்ரா இவன் ஒரு ஆளு. அங்க பாரு நத்தைவோ கெடக்கு அத பொறுக்கி பைல போடு. நேரா நேரத்துல வூட்டுக்கு போவோம்..."
கிழக்கு கரை மீது ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து பரந்து நிற்கிற ஆலமரத்தின் பழங்கள் விழுந்து சிதறி அந்த இடமே அசுத்தமாய் இருப்பது போல் இருந்தது. பழங்கள் விழுந்து விழுந்து அந்த இடத்தில் மட்டும் தண்ணீர் கலங்கலாக இருந்ததால் நத்தைகள் கண்ணுக்குத் தெரியவில்லை. காலால் தடவி தடவி தங்கவேல் ஒரு பக்கமும் தங்கமணி ஒரு பக்கம் நத்தைகளை எடுத்துக்கொண்டிருந்தனர். நத்தையைப் போல் அல்லாமல் முழு உருண்டையாக நத்தையின் அளவிலேயே தங்கமணியின் கையில் ஏதோவொன்று தட்டுப்பட கோலிக்குண்டாக இருக்குமென ஆர்வத்தோடு எடுத்தான். வெளிர் மஞ்சளில் எலுமிச்சை பழம் கையில் அகப்பட்டது. ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பு போட்டதாக இருக்கும். அழுகிப் போகாமல் இருந்தது. தாத்தாவிடம் காட்டினான்.
"ஒனக்கு எதாவது புத்தி கித்தி இருக்கா... அத போயி ஏன்டா எடுத்த. எவனாவது மந்திரிச்சி கொண்டாந்து போட்ருப்பான். எவமூட்டு பீடைலாம் நம்மள வந்து சேர்றதுக்கு... தூக்கி போட்றா..." எனச் சத்தமாகவே கத்தினார்.
'தண்ணிக்குள்ள கெடக்குறது எலுமிச்சபழம்னு எனக்கு என்னா தெரியும். உருண்டையா இருக்கேன்னு எடுத்தேன்.' என மனதுக்குள்ளேயே முனுமுனுத்தான்.
பேரனை முறைத்தவாறே... நீருக்குள்ளிருந்து கைப்பிடியோடு கூடிய நான்கடி வெட்டருவாளை எடுத்தார் தங்கவேல். பதற்றத்தோடு தூக்கி கரையில் வீசியவர், சுற்றிலும் பார்த்தார். தூரத்தில் படித்துறைக்கு அருகில் இருவர் மட்டும் இருந்தனர். அவர்கள் இவர்களைப் பார்ப்பது போல் இருப்பதாய் உணர்ந்தவர், பேரனைக் கையில் பிடித்துக்கொண்டு மேற்கே நகர்ந்தார். இவர்கள் நகர நகர தூரத்தில் இருப்பவர்கள் இவர்களை நோக்கி நகர்ந்தனர்.
"தங்கமணி... நத்த புடிச்சது போதும். நாலு நண்ட புட்டு கொழம்பு வச்சிக்கிட்டா இந்த நத்தைவோல தொட்டுக்க செஞ்சிக்கலாம். மின்னேரத்துல போனாதான் இதெல்லாம் செய்ய சரியா இருக்கும். கை கால நல்லா கழுவிட்டு மேல ஏறு..." என்றார்.
நத்தையும் நண்டும் இருக்கிற பையை கரை மேல் வைத்துவிட்டு கை கால்களைத் தேய்த்து கழுவிக் கொண்டிருந்தனர். தண்ணீரில் அலையலையால் இரண்டு உருவம் தெரிந்தது. நிமிர்ந்து பார்த்தார் தங்கவேல். ஊமத்தம் பூவை ஒரு கையிலும் அப்பாவை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டிருந்த சிறுவனை முறைத்தபடி நின்றான் தங்கமணி.
"எந்தூருங்க நமக்கு... இங்க என்ன பண்றீங்க" எனக் கேட்டார் தங்கவேல்.
"நாந்தாங்க கேக்கணும் அத. நாங் இந்த ஊருதான்... நீங்கதான் வெளியூரு மாதிரி இருக்கு" என்றார் கரையில் நிற்பவர்.
"நாங்க கங்கண்றத்துலருந்து வரோம். பய நண்டு நண்டுன்னாம் அதாங்..." எனக் குரலைத் தாழ்த்தி சொன்னார் தங்கவேல்.
"தண்ணியிலருந்து கர மேல நீங்க தூக்கி போட்டத பாத்தேன். அதனாலதான் ஊரே ரெண்டா கெடக்கு. வேற யாருகிட்டயும் சொல்லிட்டு நிக்காதீங்க... நீதான் ஆளுன்னுபுடுவாங்க" என எச்சரித்தார்.
விறுவிறுவென மேலேறியவர், பேரனைக் கையில் பிடித்துக்கொண்டு வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்.
"கங்கண்றத்தார... ரோட்டு மேலயே போவாத. ரோந்து வருவாங்க. குறுக்க பூந்து போயிடுங்க" என்றார் வடவாத்தங்கரை ஆள்.
"நாங்க என்னாங்க செஞ்சோம். நாங்க எனுமோ திருட்டு பய மேறி சொல்றீங்க" எனக் குரலை உயர்த்தியே கேட்டார் தங்கவேல். தங்கமணி பயத்தோடு நின்று கொண்டிருந்தான். ஊமத்தம் பூ சிறுவன் இம்முறை தங்கமணியை முறைத்துக் கொண்டிருந்தான்.
"நீங்க திருடுனீங்கன்னு சொல்லல கங்கண்றத்தார... நாலஞ்சி நாளுக்கு முன்னதான் கரும்பாயிரங் கோயிலு அருவாள புடுங்கி மேல தெருவுல ஒரு ஆள வெட்டிப்புட்டாங்க. போலீசு இத தேடிதான் அலயிது." எனச் சொன்னதுதான் தாமதம். பேரனிடம் இங்கேயே நில்லு எனச் சொல்லிவிட்டு ஆற்றில் இறங்கி மறு கரைக்குச் சென்று அரிவாளை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தார்.
வடவாத்தங்கரை ஆளும் அவரது மகனும், தங்கமணியும் மிரண்டு நின்றனர்.
பேரனைக் கையில் பிடித்தவர், மெயின் ரோட்டிலேயே வேகமாக நடந்தார். தார் ஊற்றாத கப்பி போட்ட ரோட்டின் அனலில் ரோட்டோர செடிகள் துவண்டிருந்தன. வடவாத்தங்கரை ஆள் நின்ற இடத்தைவிட்டு நகராமல் அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார். வெயிலில் ஊமத்தம் பூ துவண்டு போனதால் ஆற்றில் வீசினான் சிறுவன்.
தூரத்தில் ரோந்து வண்டி வருவதுபோல் இருந்தது. தங்கமணி அழ ஆரம்பித்தான். தங்கவேல் வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
தெவசம் - 3
கருத்துகள்
கருத்துரையிடுக